Published : 06 Feb 2017 11:21 AM
Last Updated : 06 Feb 2017 11:21 AM

குறைந்த விலை பேட்டரி ஸ்கூட்டர்!

ஹீரோ மோட்டார் குழுமத்தின் அங்க மான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் குறைந்த விலையிலான பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. `பிளாஷ்’ என்ற பெயரிலான இந்த ஸ்கூட்டர் கடந்த வாரம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்களில் இதுவரை வெளிவந்த மாடல்களில் இதுதான் குறைந்த விலையிலானதாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வந்துள்ள இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை.இந்த ஸ்கூட்டருக்கு ஆர்டிஓ பதிவு எண் பெற வேண்டிய அவசியமும் கிடையாது. இது அதிகபட்சம் 40 கி.மீ. வேகத்தில் செல்லும் என்பதால் இதற்கு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கிடையாது.

இது 250 வாட்ஸ் மோட்டாரைக் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 65 கி.மீ. தூரம் ஓடும். இதனால் இது நகர்ப்புற போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றதாகும். இதில் உள்ள 48 வோல்ட்/20ஏஹெச் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையாகும்.

இதில் எடை குறைந்த 16 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதன் ஒட்டுமொத்த எடையே 87 கிலோவாகும். முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்பகுதியில் இருபுறமும் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இரு சக்கரமும் டிரம் பிரேக் கொண்டது.

அவசர கால ஷார்ட் சர்கியூட் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. இந்த ஸ்கூட்டருக்கு இரண்டு ஆண்டு உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளிக்கிறது. பர்கண்டி மற்றும் சில்வர் ஆகிய இரு கண்கவர் வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

வழக்கமான ஸ்கூட்டர்களை விட இது சற்று உயரம் குறைவானது. இதனால் முதல் முறையாக ஸ்கூட்டர் ஓட்ட விரும் பும் அதேசமயம் வேகமாகச் செல்வதை விரும்பாதவர்களுக்கு மிகவும் ஏற்றது. பேட்டரி வாகனம் என்றாலே விலை அதிகம் என்ற நிலையை முற்றிலுமாக மாற்றியுள்ளது பிளாஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x