Published : 04 Jun 2019 02:19 PM
Last Updated : 04 Jun 2019 02:19 PM

ஜிஎஸ்டியில் போலி பில்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி: வரி ஏய்ப்பு செய்த வர்த்தக நிறுவனங்கள்

சில வர்த்தக நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யும்போது போலி பில்கள் மூலம்  ரீஃபண்ட் எனப்படும் வரிச்சலுகை பெற்று மோசடி செய்துள்ளதை மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கண்டு பிடித்துள்ளது.

வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்திருந்த ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி ரிட்டன்களை கவனமாக ஆராய்ந்ததில் ஆயிரக்கணக்கான ரிட்டன்களில் வரி ஏய்ப்பு மோசடி மற்றும் பணமோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு ஜிஎஸ்டி ரீஃபண்ட் எனப்படும் வரிச்சலுகையிலும் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் செலுத்திய மாதாந்திர ஜி.எஸ்.டி.ஆர் ரிட்டன்களையும் இறுதி ஜி.எஸ்.டி ரிட்டன்களையும், ஜி.எஸ்.டி கவுன்சலின் தணிக்கைக் குழு தீவிரமாக ஆராய்ந்து, உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit- ITC) பயன்பாட்டை வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் திரும்ப அளிக்கும்.

இதுபோல அளிக்கப்படும் உள்ளீட்டு வரி வரவை, போலியான பில்களைக் கொடுத்து சில வர்த்தக நிறுவனங்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட புலனாய்வில், போலி பில்களைக் கொடுத்து, உள்ளீட்டு வரிப் பயனைப் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் போலியான ரசீதுகளை செலுத்தி மாநில ஜிஎஸ்டி அமைப்புகள் மூலம் உள்ளீட்டு வரி வரவை பெற்றுள்ளனர். 396 போலி பில்கள் தொடர்பான வற்றில் மோசடி நடந்துள்ளதை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் 5,887.54 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

இதுபோலவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாநில ஜிஎஸ்டியில் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளதை கண்டறிந்துள்ளன. அதில் 225 பில்கள் போலியாக சமர்பிக்கப்பட்டு 1,314.77 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x