Last Updated : 02 May, 2019 12:00 AM

 

Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM

ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபரை தேடும் மத்திய அரசு

மத்திய அரசின் மிகவும் உயரிய பொறுப்பான ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) பதவிக்கு உரிய நபரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.

இதற்குரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மத்திய பணியாளர் அமைச்சகம் இதற்குரிய விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 1-ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வராததால் மே 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு உரிய நபரைத் தேடும் பணியை கடந்த மார்ச் மாதமே அமைச்சகம் மேற்கொண்டது. தலைமை ஊழல் கண்காணிப்பாளர் (சிவிசி) மற்றும் கண்காணிப்பு ஆணையர் (சிவி) ஆகிய இரு பதவிகளுக்கும் உரிய நபரைத் தேடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிவிசி ஆக உள்ள கே.வி. சவுத்ரி மற்றும் ஆணையர் டி.எம். பாசின் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் இவ்விரு பதவிகளுக்கும் உரிய நபர்களைத் தேடும் பணி ஆரம்பமானது. மத்திய ஊழல் கண்காணிப்பு துறையில் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் இரண்டு கண்காணிப்பு ஆணையர்கள் உள்ளனர். இரண்டு கண்காணிப்பு ஆணையர்களில் ஒருவர் டி.எம். பாசின். மற்றொருவர் தேசிய புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் சரத்குமார் ஆவார்.

இப்பதவிக்கு தகுதி படைத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் போதிய அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை. விண்ணப்பித்த சில நபர்களும் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதனால் தேர்வு செய்வது தாமதமாகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே விண்ணப்பங்களைப் பெறுவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள், தாங்கள் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் என கருதுவது குறித்து 300 வார்த்தைகளில் ஒரு கடிதத்தையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பாளர் பதவிக்காலம் 4 ஆண்டுகளுக்கானது. அல்லது இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் 65 வயது வரை இப்பதவியில் நீடிக்கலாம். இதில் எது முதலோ அது பதவிக் காலமாக கருதப்படும்.

விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்துறையில் 25 ஆண்டுக்கால அனுபவம் மிக்கவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அகில இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்ஓஎஸ்) ஆகிய ஏதாவது ஒரு சிவில் பணியில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். ஊழல் கண்காணிப்பு துறை தொடர்பாக மிகுந்த அனுபவம் மிக்கவராக இருத்தல் அவசியம்.

இதுதவிர, அரசுத் துறை நிறுவனங்களில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள், குறிப்பாக நிதி, காப்பீடு, வங்கி, சட்டம், கண்காணிப்பு, புலனாய்வு உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் நீண்ட அனுபவம் மிக்கவராக இருத்தல் வேண்டும். இதேபோல மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தலைவர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் உள்ளவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது இந்நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களும் விண்ணப்பிக்க தகுதிபடைத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x