Published : 19 Mar 2019 12:32 PM
Last Updated : 19 Mar 2019 12:32 PM

‘‘எந்த நேரத்திலும் நன்றி மறக்கமாட்டேன்’’- நெருக்கடியான நேரத்தில் தம்பியின் கடனை அடைத்த முகேஷ் அம்பானி: நெகிழ்ந்து போன அனில் அம்பானி  

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் மேலும் 200 கோடி ரூபாயை திரட்ட ஜியோ நிறுவனத்தின் பாக்கித் தொகையுடன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அசையா சொத்துக்களை விற்பனை செய்ய அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சண்டையிட்டு பிரித்துக் கொண்டனர். சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, குடும்ப சண்டை உருவாகி பின்னர் தாய் மத்தியஸ்தம் செய்து சொத்துக்கள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு தொழில்கள் என ஆளுக்கு ஒரு திசையில்  பயணம் செய்தனர்.

அண்ணன் முகேஷ் அம்பானி புதிய, புதிய தொழில்களை தொடங்கி பணத்தை குவித்தார். அவரது ஒருவொரு அடியும் வெற்றியை குவிக்க இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை தொட்டுள்ளார். அதேசமயம், தம்பி அனில் தொடங்கிய நிலையன்ஸ் பவர் நிறுவனம் முதல் பல தொழில்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. வில்லங்கமாக கடன் பிரச்சனையில் சிக்கி வெளியில் வர முடியாமல் முழிபிதுங்கி நிற்கிறார். அவரை நம்பி கடன் கொடுத்த நிறுவனங்கள் பெரும் நெருக்கடி கொடுக்க சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயற்சி எடுத்து வருகிறார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் 45,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் ஏற்பட்டது. அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.

ஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ₹2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை. தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,600 கோடி தர வேண்டி இருந்தது.

நீதிமன்ற மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு ₹550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, தொகையை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 4 வாரங்களுக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்தவில்லை எனறால், 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு கெடு விதித்தது.

இதனையடுத்து உடனடியாக 260 கோடியை திரட்ட அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், 200 கோடி ரூபாயை அனில் அம்பானி செலுத்த வேண்டும். இதனை திரட்ட உடனடியாக கையில் பணம் இல்லாம் தவித்து வந்தார்.

மேலும் சொத்துக்களை விற்பனை செய்ய அனில் அம்பானி மேற்கொண்ட முயற்சியும் உடனடியாக கைகூடவில்லை. மார்ச் 20-ம் தேதிக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு கடன் தொகையை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடுவிதித்து இருந்த நிலையில் தவியாய் தவித்து வந்தார் அனில் அம்பானி. 460 கோடி ரூபாயை செலுத்தாமல் போனால் சிறைக்கு செல்வதுடன் பெரும் அவமானத்தை சந்திக்க வேண்டும் என்பதால் மனமொடிந்து போனார் அனில் அம்பானி.

இந்தநிலையில் தம்பியின் நிலையை பார்த்தும், குடும்பத்திற்கு ஏற்படும் அவமானத்தை கருத்தில் கொண்டும் 260 கோடி ரூபாய் கொடுத்து தக்க தருணத்தில் உதவியுள்ளார் முகேஷ் அம்பானி. அவர் கொடுத்த 460 கோடி ரூபாயை நேற்று செலுத்தி கடன் நெருக்கடியில் இருந்து தப்பியுள்ளார் அனில் அம்பானி.

இதையடுத்து, தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், அண்ணி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்று தக்க நேரத்தில் உதவியதற்கு  எனது அண்ணன் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானிக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த உதவியை எந்த நேரத்திலும் மறக்க மாட்டேன். கடந்த கால கசப்பான நிகழ்வுகளை கடந்து இனி நாம் பயணிப்போம்” என அனில் அம்பானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் இரு சகோதரர்களிடையே இருந்து வந்த கசப்புணர்வு நீங்கி, குடும்ப உறவுகளும் சுமூகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x