Published : 11 Mar 2019 10:50 AM
Last Updated : 11 Mar 2019 10:50 AM

மத்திய அரசின் கெடுபிடியான நடவடிக்கைகளால் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி 40% சரிவு: 13 ஆயிரம் என்ஜிஓ-க்களின் உரிமம் ரத்து

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு எடுத்துவந்த பல்வேறு கெடுபிடியான நடவடிக்கைகளால் அந் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி கடந்த நான்கு ஆண்டுகளில் 40 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமூக மற்றும் மக்களின் மேம்பாட்டுக் காக இயங்கிவரும் தொண்டு நிறுவனங் களுக்குப் பலதரப்பிலிருந்தும் நிதி உதவிகள் வருகின்றன. தொண்டு நிறுவனங் களுக்கு கிடைக்கும் நிதி மீது எந்த வரியும் இல்லை. நல்ல காரியங்களுக்காக செய்யப்படும் நிதி உதவிகளுக்கு தரப்படும் சலுகைகளைப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டுவருவதும் தொடர் கதையாக உள்ளது.

எனவே, மத்திய அரசு தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி உதவிகள் மீது கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் எனப்படும் எஃப்சிஆர்ஏ 2010-ல் உள்ள விதிமுறைகளை மீறும் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மத்திய அரசின் இந்த கெடுபிடியான நடவடிக்கைகளால் வெளிநாடுகளிலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி உதவி கடந்த 4 வருடங்களில் 40 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளதாகக் பெயின் அண்ட் கோ என்ற கன்சல்டன்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப் படுகிறது.

மேலும், சுமார் 13 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டில் மட்டுமே 4,800 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அதேசமயம், இதில் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொண்டு நிறுவனங்கள் எனவும், அரசு சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்கிறது என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வருடம் ரிசர்வ் வங்கி குழுவில் இருந்த பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளையின் இந்திய இயக்குநர் நச்சிகெட் மோர் என்பவரை நீக்கியது மத்திய அரசு. இதுபோன்ற பல்வேறு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் சார்ந்த நபர்கள் மீது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியது.

வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி உதவிகள் குறைந்தாலும், உள்நாட்டில் தனிநபர்கள் செய்யும் நிதி உதவிகள் அதிகரித்துள்ளன. 2014-15 நிதி ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்த தனிநபர்கள் நன்கொடை மதிப்பு, 2017-18-ல் ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் சிஎஸ்ஆர் எனப் படும் சமூக தொண்டு நடவடிக்கைகளுக்காக இதே காலகட்டத்தில் ரூ. 13 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளன. இது ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.4.2 லட்சம் கோடி

சமூக முன்னேற்றத்துக்கான மக்கள் நலத் திட்டங்களுக்கான இது போன்ற நிதி உதவிகள் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள பெயின் அண்ட் கோ ஆய்வு, உலக வங்கி குறிப்பிட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான காரணிகளை இந்தியா அடைய வேண்டு மெனில் ஆண்டுக்கு ரூ.4.2 லட்சம் கோடி நிதி அவசியம் என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x