Last Updated : 27 Feb, 2019 08:45 AM

 

Published : 27 Feb 2019 08:45 AM
Last Updated : 27 Feb 2019 08:45 AM

நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ. 147 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை

வைர வியாபாரி நீரவ்மோடிக்கு சொந்தமானரூ.147.72 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்த சொத்துகள் மும்பை மற்றும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள அசையா சொத்துகளாகும். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.147,72,86,651. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் 8 கார்கள், தொழிற்சாலை மற்றும் இயந்திரங்கள், சில ஆபரணங்கள், ஓவியங்கள் மற்றும் சில கட்டிடங்களும் இதில் அடங்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்து இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பயர்ஸ்டார் டயமண்ட் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், பயர்ஸ்டார் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், ராதேசிர் ஜூவல்லரி கம்பெனி பிரைவேட் லிமிடெட், ரிதம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நீரவ் மோடி நடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்நியச் செலாவணி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கெனவே நீரவ் மோடி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நியச் செலாவணி மோசடி வழக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பதிவு செய்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியே ஏமாற்றும் நோக்கில் வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. வங்கி வழங்கும் உத்தரவாத கடிதத்தை தவறுதலாக பயன்படுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.1,725 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இது தவிர வைரம், தங்கம், ஆபரணம் உள்ளிட்ட ரூ. 489 கோடி மதிப்பிலான சொத்துகளும் மோடி குழுமத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பான வழக்கு நீரவ் மோடி மற்றும் சிலர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x