Published : 21 Feb 2019 03:06 PM
Last Updated : 21 Feb 2019 03:06 PM

எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ. 260 கோடி: ஒப்புதல் கோரும் அனில் அம்பானி

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு முதல்கட்டமாக 260 கோடி ரூபாயை செலுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். ₹45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.

ஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ₹2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை. தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,600 கோடி தர வேண்டி இருந்தது.

நீதிமன்ற மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு ₹550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில்அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது தெளிவாகியுள்ளது. இதனால் அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்கிறது. 118 கோடி ரூபாயை அனில் அம்பானி கருவூலத்தில் செலுத்தியுள்ளார். மீதமுள்ள 450 கோடி ரூபாயை அவர் 4 வாரங்களுக்குள் எரிக்ஸன் நிறுவத்துக்கு செலுத்தவில்லை எனறால், 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.

இதனையடுத்து உடனடியாக 260 கோடியை திரட்ட அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களிடம் ஒப்புதலை அந்நிறுவனம் கோரியுள்ளது. இந்த பணத்தை நேரடியாக எரிக்ஸன் நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், 200 கோடி ரூபாய் தேவை என்பதால் அதனை 4 வாரங்களுக்கும் திரட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x