Last Updated : 30 Jan, 2019 10:26 AM

 

Published : 30 Jan 2019 10:26 AM
Last Updated : 30 Jan 2019 10:26 AM

ரூ.6900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல்: வருமான வரித்துறை பெருமிதம்

பினாமி சொத்து தடுப்புச் சட்டத்தின் வாயிலாக இதுவரை ரூ.6900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித் துறை விளம்பரம் வாயிலாக அறிவித்திருக்கிறது.

மற்றவர் பெயரில் அசையும் அல்லது அசையா சொத்துகளை வாங்கிக் குவிப்பது சட்டப்படி குற்றம். பினாமிதாரர் என்று ஒருவர் பெயரில் சொத்தை வாங்கிவிட்டு அதன் மீதான உரிமையை இன்னொரு நபர் பெறும் வழக்கத்தைத் தடுக்க கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பினாமி பரிமாற்ற தடுப்புச் சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் வேறொருவர் பெயரில் இருக்கும் பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இதுவரை ரூ.6900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

இது தொடர்பாக முன்னணி பத்திரிகைகளில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், "பினாமி பரிவர்த்தனைகளை ஆதரிப்பதும் தூண்டுவதும் சட்டப்படி குற்றம். பினாமிதாரர் (அதாவது சொத்துகள் யார் பெயரில் வாங்கப்படுகிறதோ) பயனாளர் (சொத்துகளை யார் அனுபவிக்கிறார்களோ) இருவருமே தண்டனைக்குரியவர்கள்தான். பினாமி சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடுவோர்க்கு 7 ஆண்டுகள் சிறை, சொத்துகளின் சந்தை மதிப்பின்படி 25% அபராதம் என தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஏற்கெனவே, வருமான வரித் துறை ரூ.6900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளைப் பறிமுதல் செய்திருக்கிறது.

சொத்துகள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்குவதும்கூட தண்டனைக்குரிய குற்றம்தான். போலி தகவல் வழங்குவோர்க்கு 5 ஆண்டுகள் சிறை, சொத்து மதிப்பில் 10% அபராதம் விதிக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே, குடிமக்கள் அனைவரும் பினாமி சொத்துகளை ஒழிப்பதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x