Published : 12 Dec 2018 09:20 AM
Last Updated : 12 Dec 2018 09:20 AM

சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை; படேல் விலகல், 5 மாநில தேர்தல் முடிவால் பாதிப்பில்லை

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா மற்றும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதுவும் பங்குச் சந்தையை பாதிக்கவில்லை. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, இரு பெரும் நிகழ்வுகளுக்குப் பிறகு ஏற்றம் பெற்றுள்ளது.

மும்பை பங்குச் சந்தை 190 புள்ளிகள் உயர்ந்து 35,150 புள்ளிகளில் நின்றது. காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சந்தையில் ஸ்திரமற்ற நிலை நிலவியது. ஒருகட்டத்தில் 500 புள்ளிகள் வரை சரிந்ததைப் பார்த்தபோது கடுமையான வீழ்ச்சியை பங்குச் சந்தை சந்திக்கும் என்ற பரபரப்பான சூழல் உருவானது. ஆனால் பிற்பகலில் பங்குச் சந்தை ஏற்றம் பெற்றது. இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்ட சரிவு பிறகு மீளத் தொடங்கியது. வர்த்தகம் முடிவில் 60 புள்ளிகள் உயர்ந்து 10,549 புள்ளிகளைத் தொட்டது.

திங்கள்கிழமை வர்த்தகத்தில் பங்குச் சந்தை 714 புள்ளிகள் சரிந்தது. தேர்தல் முடிவுகளால் சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. கடந்த இரண்டு மாதங்களில் பங்குச் சந்தை இந்த அளவுக்கு சரிந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய், எரிவாயு நிறுவன பங்குகள் தவிர பெரும்பாலான பங்குகள் ஏற்றம் பெற்றன.

யெஸ் வங்கி பங்குகள் மிக அதிக அளவு ஏற்றம் பெற்ற பங்காகும். இது 7.29 சதவீத அளவுக்கு உயர்ந்தது. வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில் தற்போதைய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ராணா கபூருக்கு அடுத்தபடியாக இப்பதவிக்கு வரவிருப்பவர் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சன் பார்மா, ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐடிசி,மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோடக் வங்கி, கோல்இந்தியா, டிசிஎஸ் மற்றும் ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 5.75 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

அதேசமயம் ஹீரோ மோட்டோ கார்ப், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, எல் அண்ட் டி, ஹெச்யுஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.58 சதவீதம் வரை சரிந்தன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு உர்ஜித் படேல் ராஜினாமாவால் சற்று சரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x