Published : 09 Dec 2018 09:17 AM
Last Updated : 09 Dec 2018 09:17 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன விவகாரம்: மக்கள் நலனுக்கு ரூ.100 கோடி நிதி; வேதாந்தா குழுமம் முடிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன மூடல் விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் நலனுக்காக ரூ. 100 கோடி நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளதாக வேதாந்த குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கூறியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்குப் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் வருவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், தொடர்ந்து நிறுவனத்துக்கு எதிராகப் போரட்டங்கள் எழுந்தன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையும் மூடப்பட்டது.

ஆனால், ஆலை மூடப்பட்டதால் காப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், அதை நம்பியிருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பரவலாகக் கூறப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான முயற்சிகளையும் வேதாந்தா நிறுவனம் எடுத்து வருகிறது. இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் ஆலை குறித்த தனது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை, நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் நடந்த விசாரணையில், வேதாந்தா குழுமம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், கூறியதாவது, “தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் அறிக்கையில், ஆலையை மூடுவதற்கான வழக்கில் நிறுவனத்துக்கு எந்தவிதசம்மனோ அல்லது வாதாடுவதற்கான வாய்ப்போ வழங்கப்படவில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்பதற்கான போதிய ஆதாரமும் இல்லை. மேலும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள காரணங்கள், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குப் போதுமான காரணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது முறையற்றது. நீதிமன்றத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. ஆனாலும், ஆய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவகாரங்கள் குறித்தும் நிறுவனம் கவனம் செலுத்தும். இதுபோக தூத்துக்குடி மக்களின் நலனுக்காக ரூ. 100 கோடி நிதியுதவி செய்யவும் வேதாந்தா முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x