Published : 07 Dec 2018 12:15 PM
Last Updated : 07 Dec 2018 12:15 PM

இனி தேவையில்லை டாலர்; ரூபாய் மதிப்பில் வர்த்தகம்- ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா புதிய ஒப்பந்தம்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. உலக அளவில் வலிமையான நாணயமாக கருதப்படுவதால் அதில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு எப்போதுமே மவுசு நிலவி வருகிறது. உலக அரங்கில் டாலர் கோலோச்சி வருகிறது.

ஆனால் அமெரிக்க டாலரை மையப்படுத்தி வர்த்தகம் செய்வதால் விலைவாசி மாறுபாடு, அமெரிக்காவின் ‘ஆட்டத்துக்கு’ ஆடும் நிலை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி வர்த்தகம் செய்யும் நாடுகள் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட நெருக்கடியும் ஏற்படுகிறது.

இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒன்றுகூடி யூரோ நாணயத்தை முன்னிலைப் படுத்தி வருகின்றன. ஆனால் மற்ற நாடுகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் இல்லை. இந்த சூழலில் சொந்த நாணயத்தில் பரிவர்த்தனை செய்யும் முயற்சியை கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவும், இந்தியாவும் மேற்கொண்டு வருகின்றன.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா அதற்கான தொகையை இந்திய ரூபாயில் செலுத்துகிறது. இதனால் டாலர் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ரூபாய் மாற்று தொகை போன்ற பிரச்சினைகள் உள்ளன. அந்நியச் செலாவணி கையிருப்பு பராமரிப்பிலும் சிக்கல் இல்லை.

இதன் தொடர்ச்சியாக அதிக ஏற்றுமதி வாய்ப்பு உள்ள நாடுகளுடன் சொந்த நாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் முக்கியமானது, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வர்த்கத்தின்போது, சொந்த நாட்டு பணத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம்.

இந்த நாணய மாற்று ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளும் தங்கள் சொந்த நாட்டு நாணயத்தின் மூலமே வர்த்தகம் செய்து கொள்ளலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சொந்த நாட்டு நாணயங்கள் மூலம் பணம் செலுத்தலாம். இதற்காக மூன்றாவது நாட்டு நாணயமாக அமெரிக்க டாலரை தேட வேண்டிய அவசியமில்லை.

டாலர் மதிப்பில் வர்த்தகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் இனி இருக்காது. இந்திய வர்த்தகர்களும் இந்திய ரூபாய் மதிப்பில் இந்திய சந்தைகளை கணக்கீட்டு ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் செய்ய இயலும். இதுபோலவே தங்கள் சொந்த நாட்டு நாணயத்தை கணக்கில் கொண்டு இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கவோ, விற்கவோ அந்நாட்டால் முடியும்.

இந்த ஒப்பந்தத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் செய்யத் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதுமட்டுமின்றி தொழில், வர்த்தகம், கட்டுமானம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை சாரந்த ஒப்பந்தங்களும் இருநாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இதேபோன்ற பரஸ்பர நாணய பரிமாற்று ஒப்பந்தத்தை ஜப்பானுடன் இந்தியா செய்து கொண்டது. சீனாவும், தென் கொரியாவும், மற்ற நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை அதிகஅளவில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x