Published : 03 Dec 2018 01:59 PM
Last Updated : 03 Dec 2018 01:59 PM

‘‘கார்களுக்கு 40% வரி குறைப்பு’’: முடிவுக்கு வந்தது அமெரிக்கா- சீனா ‘வர்த்தக மோதல்’

மற்ற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் கடுமையாக மோதிக் கொண்ட அமெரிக்காவும், சீனாவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முன் வந்துள்ளன.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.

இதையடுத்து, அமெரிக்காவும், சீனாவும், மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. சீனப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்க ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.

மேலும், அமெரிக்காவின் தயாரிப்பு ரகசியங்களை, காப்புரிமை விதிகளை மீறி சீனா திருடுவதாகவும், வரத்தக நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை உயர்த்தியது.

இதனால் உலகளாவிய ‘வர்த்தகப் போர்’ நடைபெறும் சூழல் உருவானது. இதனிடையே மோதலைக் குறைக்கும் வகையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் ஏற்கெனவே இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில், அர்ஜெண்டினாவில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது, வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்தும் வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் இரு நாடுகளும் கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை தற்காலிகமாக 90 நாட்கள் அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான 40 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x