Last Updated : 19 Nov, 2018 09:50 PM

 

Published : 19 Nov 2018 09:50 PM
Last Updated : 19 Nov 2018 09:50 PM

9 மணிநேர கூட்டம் முடிந்தது; மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை: முக்கிய தகவல்கள்

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் உரசல் நீடித்து வந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிசர்வ் வங்கி வாரியக்கூட்டம் இன்று 9 மணிநேரம் நடந்து சுமூகமாக முடிந்து.

இந்தக் கூட்டத்தின் முடிவில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த விதிமுறைகளைத் தளர்த்தவும், சிறு, குறுந்தொழில்களுக்குக் கடன் வழங்குவதில் விதிமுறைகளைத் தளர்த்தவும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உரசல் போக்கு

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே உரசல் போக்கு இருந்தது வந்ததாகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால், துணை கவர்னர் விரால் ஆச்சார்யா சமீபத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து, ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பாதிப்படுவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, மத்தியஅரசு, ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான உரசல் வெளிப்படையாகத் தெரிந்தது.

உபரி நிதி

மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியான ரூ.9 லட்சம் கோடியில் ரூ.3.5 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு, வாரியக்குழு உறுப்பினர்கள் மூலம் மத்தியஅரசு அழுத்தம் கொடுக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. இதற்கிடையே வாரியக்குழுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்யஉள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

வாரியக்குழுக் கூட்டம்

இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று ரிசர்வ் வங்கியின் போர்டு மீட்டிங் மும்பையில் நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர்கள் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் பொருளாதார விவாகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், உறுப்பினர் எஸ். குருமூர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

9 மணிநேரம்

அரசு தரப்பில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர்களுக்கும் இடையிலான பேச்சு மிகவும் சுமூகமாக நடந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 9 மணிநேரம் வரை இருதரப்பும் இடையே நடந்த பேச்சில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

வலியுறுத்தல்

குறிப்பாக வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் எளிதாகக் கடன் வழங்கும் வகையில் அதிகாரத்தை ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டும் என்று குருமூர்த்தி வலியுறுத்தினார். மேலும், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், நலிவடைந்த வங்கிகளு்ககு கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியைக் கொண்டு பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

ஒப்புதல்

இந்தக் கூட்டத்தின் முடிவில், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் வழங்கு விதிமுறைகளைத் தளர்த்தவும், வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் கடனை எளிதாக வழங்கவும் விதிமுறைகளைத் தளர்த்த ரிசர்வ் வங்கி சம்மதித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், பிசிஏ எனப்படும் பிராம்ட் கரெக்டிவ் ஆக்சன் நடவடிக்கையில் இருந்து விதிமுறைகளை 11 பொதுத்துறை வங்கிகளுக்குத் தளர்த்து குறித்து விரைவில் முடிவு எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி இருப்பு தொகை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது ஆனால், அது குறித்த தகவல் ஏதும் இல்லை.

உபரிநிதியை அளிக்க குழு

கூட்டம் குறித்து வாரியக் குழுஉறுப்பினர் ஒருவர் கூறுகையில், “மிகவும் இணக்கமான சூழலில் கூட்டம் நடந்தது. பெரும்பாலான சிக்கல்களுக்கு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டு இருக்கின்றன. விரைவில் ஒரு குழு உருவாக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு மாற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும்” எனத் தெரிவித்தார்

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறுகுறு நிறுவனங்கள் கடன்அளித்தலில் கட்டுப்பாடு, வேளாண் கடன் அளித்தல் போன்றவற்றில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இதனால், அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பது என்பது மத்திய அரசுக்குக் கடினமாக இருந்தது. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளதால், இனிவரும் காலங்களில் கடன்கள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x