Published : 12 Nov 2018 10:51 AM
Last Updated : 12 Nov 2018 10:51 AM

ஒரு நாள் விற்பனை ரூ. 2.25 லட்சம் கோடி: முந்தைய சாதனையை முறியடித்தது அலிபாபா

ஒரு நாள் சிறப்பு விற்பனையில் இதுவரை நிகழ்த்திய முந்தைய சாதனைகளை முறியடித்து, அலிபாபா நிறுவனம் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 25 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் உலக அளவில் கொடிகட்டி பறக்கிறது. அமேசான் உட்பட அமெரிக்க நாடுகளின் வர்த்தக நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. குளோபால் ஷாப்பிங் திருவிழா என்ற பெயரில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அலிபாபா அவ்வப்போது நடத்தி வருகிறது.

அந்தவரிசையில், நவம்பர் மாதம் 11-ம் தேதியை முன்னிறுத்தி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 11:11 என்ற பெயரில் இந்த விற்பனை நடத்தப்பட்டது. பல்வேறு நிறுவனங்களின் மொபைல் போன்கள் உட்பட ஏராளமான எலெட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகஅளவில் இந்த விற்பனையில் இடம் பிடித்தன. டோக்கியோ முதல் பிராங்பர்ட் நகரம் வரை இந்த விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் விற்பனையாகின. ஒரு மணிநேரத்தில் 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையாகின. நேற்று ஒருநாள் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அலிபாபா நிறுவனம் முந்தைய சாதனைகளை இந்த விற்பனை முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு, ஒரு நாளில் 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்ததே இதுவரை அலிபாபாவின் உச்சபட்ச சாதனையாக அமைந்து இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x