Published : 20 Oct 2018 09:07 AM
Last Updated : 20 Oct 2018 09:07 AM

சென்செக்ஸ் ஒரே நாளில் 463 புள்ளிகள் வீழ்ச்சி: ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ. 29,945 கோடி சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று வர்த்தக சரிவை கண்டன. சென்செக்ஸ் 463 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. நிப்டி 10,303 புள்ளிகளில் முடிந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 1.33 சதவீதம் சரிந்து 34,315 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 1.43 சதவீதம் சரிந்து 10,303 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

முக்கிய புளூசிப் பங்குகளான யெஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவான வர்த்தகம் கண்டன. ராணா கபூரின் பதவி நீட்டிப்பு கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்காததால் யெஸ் வங்கி பங்கு நேற்று 6.06 சதவீதம் வரை சரிந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5.37 சதவீதம் வரை சரிந்து ரூ.1,101.35க்கு வர்த்தகம் முடி வடைந்தது. நேற்றைய வர்த் தகத்தில் ரிலையன்ஸ் சந்தை மதிப்பில் ரூ.29,945 கோடி சரிந்தது. இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகளில் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எனினும் நேற்றைய வர்த்தகத்தில் வர்த்தகச் சரிவினை இந்த பங்குகள் கண்டன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகளில் 17.4 சதவீத ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இரண்டாவது காலாண்டில் ரூ.9,516 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

சில்லரை வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளதால் நிகரலாபம் அதிகரித்துள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் முக்கிய தொழிலான பெட்ரோலியத் சுத்திகரிப்பில் லாபம் குறைந்துள்ளதால் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் அனைத்து பங்குச் சந்தைகளிலும் மந்தமான சூழல் நீடிக்கிறது. சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள்படி 2009-ம் ஆண்டிலிருந்தே ஆசிய அளவிலான பொருளாதார வளர்ச்சியின் சீனாவின் வளர்ச்சி மந்த நிலையிலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா எடுத்துவரும் முயற்சிகளால் சீன பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன.

சர்வதேச சந்தைகளில் நாஷ்டாக் 2.06 சதவீதம் சரிந்துள்ளது. நிக்கி 0.6 சதவீதமும், ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 0.05 சதவீதமும் சரிந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் நேற்றைய வர்த்தகத்தில் மெட்டல் துறை குறியீடு தவிர அனைத்து துறை குறியீடுகளும் சரிந்துள்ளன. ஐடிசி, ஹெச் யு எல், கோட்டக் மஹிந்திரா, ஹெச் பி சி எல் பங்குகள் ஏற்றம் கண்டன. இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் பங்கு நேற்று 27.94 சதவீதம் வரை சரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x