Published : 21 Sep 2018 01:21 PM
Last Updated : 21 Sep 2018 01:21 PM

அமெரிக்காவில் விலைவாசி உயரும்; பொருளாதாரம் சீரழியும்: ட்ரம்புக்கு வால்மார்ட் கடும் எச்சரிக்கை

சீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வரியை விதித்துள்ள ட்ரம்பின் நடவடிக்கையால், அமெரிக்காவில் பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து, பொருளாதாரம் சீரழியும் ஆபத்து உள்ளதாக வால்மார்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.

இரு நாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் நடைபெறும் சூழல் உருவானது. பின்னர் இரு நாடுகளும் தங்கள் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடிவு செய்தன.

இந்த நிலையில் இரு நாடுகள் இடையேயான ‘வரிப்போர்’ மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரி விதித்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

சீனாவின், இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகள், கடல் உணவுப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், மரச் சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

வால்மார்ட்

ட்ரம்ப் விதித்த இந்த வரியால் சீன நிறுவனம் மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கடும் பாதிப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வால்மார்ட் சார்பில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் ‘‘சீனா பொருள்களுக்கு வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால் வால்மார்ட் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகஅளவு உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற முறையில் இந்த வரியால் பொருட்களின் விலை உயரும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.

எங்கள் வர்த்தகம், எங்கள் வாடிக்கையாளர்கள், எங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்வோர் என அனைவரும் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் பொருளாதாரமே கடுமையாக பாதிக்கும். எனவே வரி விதிக்கும் விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலசரக்கு, காய்கறி, தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்களை விற்பனை செய்து வரும் வால்மார்ட் நிறுவனம் அதிகஅளவில் வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து வருகிறது. குறிப்பாக வீட்டுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், பர்னிச்சர், படுக்கை போன்றவற்றை வார்லமார்ட் நிறுவனமே தயாரிக்கிறது. குறைந்த செலவில் சீனாவில் இருந்து கச்சா பொருட்களை வாங்கி, அதில் இருந்து வால்மார்ட் நிறுவனம் பொருட்களை தயாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x