Published : 19 Sep 2018 02:03 PM
Last Updated : 19 Sep 2018 02:03 PM

அமெரிக்காவுடன் 20 ஆண்டுகள் வர்த்தகப் போருக்கு தயாராகி வரும் சீனா: அலிபாபா நிறுவனர் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் 20 ஆண்டுகள் வரத்தகப் போருக்கு சீனா தயாராகி வருவதால், இந்த மோதல் தீருவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளார்.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.

அண்மையில் இரு நாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய ‘வர்த்தகப் போர்’ நடைபெறும் சூழல் உருவானது. இந்த நிலையில் சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரி விதித்துள்ளது.

குறிப்பாக சீனாவின் இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த தடையால் சீனாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான அலிபாபாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் அலிபாபாவின் பங்குகள் 3.5 சதவீதம் சரிந்தன. அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் சரிந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கூறியதாவது;

அமெரிக்கா - சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர் என்பது உடனடியாக தீரும் விஷயமல்ல. 20 நாட்களிலோ, 20 மாதங்களிலோ தீராது. இந்த பிரச்னை தீர 20 ஆண்டுகள் கூட ஆகலாம். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப் விலகிய பிறகும் கூட இந்த மோதல் தொடரத்தான் செய்யும். இருநாடுகளுமே தங்கள் வர்த்தகத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. மாறாக மற்ற நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முயலுகின்றன. குறிப்பாக சீன தலைவர்கள் பொருளாதார விஷயத்தில் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x