Published : 11 Sep 2018 05:11 PM
Last Updated : 11 Sep 2018 05:11 PM

மேற்குவங்கத்திலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

ராஜஸ்தான், ஆந்திர மாநில அரசுகளை தொடர்ந்து மேற்குவங்கமும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியை 1 ரூபாய் வீதம் குறைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் 80 டாலர் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் உறுதியளித்தபடி நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வழங்கவில்லை.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வெனிசுலா, துருக்கி போன்ற நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி போன்றவையும் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாகும். இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து 84.05 ரூபாயாக உயர்ந்தது. இதுபோலவே டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து 77.13 ரூபாயாக உயர்ந்தது. மகாராஷ்டிர மாநிலம் பார்பானியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.02 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் உற்பத்தி வரியை குறைக்க முடியாது என மத்திய அரசு கை விரித்து விட்டது. அதேசமயம் மாநில அரசுகள் வரியை குறைத்து வருகின்றன. முதல் மாநிலமாக ராஜஸ்தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியில் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைப்பதாக அறிவித்தது. பாஜகவைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ள ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆந்திராவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை, லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை ரூ. 1 வீதம் குறைப்பதாக இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த நேரத்திலும் கூட 9 முறை மத்திய அரசு வரியை உயர்த்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் தற்போது அவதியடைந்து வரும் நிலையில் வரியை குறைக்க மத்திய அரசு முன் வரவில்லை. ஆனால் நாங்கள் இதுவரை வரியை உயர்த்தவில்லை. ஆனால் மக்களின் துயரத்தை உணர்ந்து வரியை குறைத்துள்ளோம். மத்திய அரசும் வரியை குறைக்க முன் வர வேண்டும்’’ என்றார்.

பெட்ரோல் விலை இன்று கோல்கத்தாவில் 83.75 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x