Published : 10 Sep 2018 11:04 AM
Last Updated : 10 Sep 2018 11:04 AM

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் புதிய உச்சம்: ராஜஸ்தானில் மட்டும் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடுமுழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றும் விலை உயர்ந்தது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை, சற்று குறைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் 80 டாலர் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் உறுதியளித்தபடி நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வழங்கவில்லை.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வெனிசுலா, துருக்கி போன்ற நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து 83.91 ரூபாயாக உயர்ந்தது. இதுபோலவே டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து 76.98 ரூபாயாக உயர்ந்தது.

மும்பையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.12 ரூபாயாகவும், டீசல் விலை 77.32 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

டெல்லியில் உள்ளூர் வரி குறைவு என்பதால் அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 80.73 ரூபாயாகவும், டீசல் விலை 72.83 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கோல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.61 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 75.68 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, பெட்ரோல் - டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநில அரசு வாட் வரியை குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு 2.50 ரூபாய் வீதம் வரியை குறைப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x