Published : 16 Aug 2018 08:42 AM
Last Updated : 16 Aug 2018 08:42 AM

ரூபாய் மதிப்பு சரிவால் கவலையடைய தேவையில்லை: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

ரூபாய் மதிப்பு சரிவால் கவலையடைய தேவையில்லை. ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் அளவுக்கு போதுமான அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.

செவ்வாய் கிழமை வர்த்தகத்தின் இடையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிக அதிகபட்சமாக (ஒரு டாலர் ரூ. 70.09) சரிந்தது. இந்த நிலையில் ரூபாய் மதிப்பு குறித்து ட்விட்டரில் அருண் ஜேட்லி கூறியிருப்பதாவது:

ரூபாய் மதிப்பினை அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. ஏற்றத்தாழ்வுகளை கையாளும் அளவுக்கு போதுமான அந்நிய செலாவணி நம்மிடம் உள்ளது. சர்வதேச நிர்ணயத்துக்கு ஏற்ப அந்நிய செலாவணி உள்ளது.

ரிசர்வ் வங்கியின் தகவல்படி, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் 40,270 கோடி டாலர் அந்நிய செலாவணி நம்வசம் உள்ளது. இந்த தொகை போதுமானதுதான்.

துருக்கியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை நாணய மதிப்பு சரிந்து, டாலர் மதிப்பு பலமடைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பேரியல் பொருளாதார சூழல் பலமாக இருக்கிறது என ஜேட்லி தெரி வித்தார்.

அடுத்த சில பத்தாண்டுகளுக்கு சர்வதேச பொருளாதாரத்துக்கு முக்கிய ஊக்கு சக்தியாக இந்தியா இருக்கும் என சர்வதேச செலாவணி மையம் சமீபத்தில் கூறியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சீனா செய்துவந்தவை, அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியா மூலம் நடக்கும் என்றும் கூறியிருந்தது.

வளர்ந்து வரும் நாடுகளில் அதிகம் சரிவை சந்தித்த கரன்ஸி இந்திய ரூபாயாகும். இந்த ஆண்டு மட்டும் 9.49 சதவீத சரிவை ரூபாய் சந்தித்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது மற்றும் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருவது ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைகிறது. மேலும் அந்நிய நிறுவன முதலீடு வெளியேறுவது மற்றும் நடப்பு பற்றாக்குறை அதிகரிப்பது ஆகியவையும் ஒரு காரணமாகும்.

அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மே மாதம் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், இவருக்கு பதிலாக பியுஷ் கோயல் நிதித்துறையை கவனித்து வருகிறார். அருண் ஜேட்லி குணமடைந்து வருவதால் விரை வில் நிதி அமைச்சக பொறுப்பை கவனிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x