Published : 24 Jul 2018 08:48 AM
Last Updated : 24 Jul 2018 08:48 AM

எப்ஆர்டிஐ மசோதாவை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

எப்ஆர்டிஐ மசோதாவை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழுவின் அறிக்கை விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதிக்குள் இந்த மசோதா ரத்து செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த மசோதாவின்படி ஆர்சி என்ற நிதி நிறுவன மறுசீரமைப்பு அமைப்பு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு திவாலா கும் வாய்ப்புள்ள வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி அமைப்புகளைக் கண்காணிக்கும் என கூறப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனம் திவாலாகும் சூழலில், நிலைமையை சீரமைக்கும் பொருட்டு வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை ஆர்சி அமைப்பு பயன்படுத்தும் என்றும் சர்ச்சைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பொது மக்கள், எதிர் கட்சிகள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த மசோதோவை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் 70 சதவீதத்துக் கும் அதிகமானோர் பொதுத் துறை வங்கிகளில் கணக்கு கள் வைத்திருக்கும் நிலையில் இதுபோன்ற மசோதாக்கள் வங்கி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என கூறப்பட்டது. ஆனால் சுதந்திரத்துக்கு பிறகான காலகட்டத்தில் இந்திய வங்கிகள் தோல்வியடைந்ததில்லை, எனவே இந்த மசோதா குறித்து கவலைப்பட தேவையில்லை என்ற கருத்தையும் துறைசார் நிபுணர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி நிறுவனங்கள் திவாலாவதை தடுக்கும் வகையிலான சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்பதால் எப்ஆர்டிஐ மசோதாவை கொண்டுவர அரசு திட்டமிட்டது. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டிஐசிஜிசி , அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ரூ.1 லட்சம் வரையிலான வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கியுள்ளது.

ஆனால் இந்த காப்பீடு குறித்த விவரங்கள் எப்ஆர்டிஐ மசோதாவில் தெளிவாக குறிப்பிடப்படாததாலும் மக்கள் மத்தியில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்தது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டிக்குப் பிறகு மூன்றாவது பெரிய பொருளாதார தவறு என இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.

எப்ஆர்டிஐ மசோதா குறித்து அச்சப்படத் தேவையில்லை, வைப்புத் தொகைக்கு எந்த பாதிப்பும் வராது என கடந்த டிசம்பரில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். இந்த மசோதா குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகள் ஆதாரமற்றவை என கடந்த ஜனவரியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த டிசம்பரில் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த அசோசேம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத், வங்கி அமைப்பின் மீதுள்ள நம்பிக்கை குலைந்தால் மக்கள் தங்களது பணத்தை வங்கிகளுக்கு பதிலாக ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள், ஒழுங்கு முறைகளுக்கு உட்படாத நிதி அமைப்புகளிலும் பணம் முதலீடு செய்யப்படலாம் என கூறியிருந்தார்.

தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த மசோதாவை சட்டமாக்குவதிலிருந்து பின் வாங்கிய மத்திய அரசு தற்பொழுது இந்த மசோதாவை கைவிட முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x