Published : 24 Jul 2018 08:43 AM
Last Updated : 24 Jul 2018 08:43 AM

கறுப்பு பணம் குறித்த அறிக்கையை பகிர்ந்து கொள்ள நிதியமைச்சகம் மறுப்பு

கறுப்பு பணம் தொடர்பான அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை ஆய்வு செய்ய, முந்தைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மூன்று விசாரணை குழுக்களின் அறிக்கைகளை அளிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை அளிப்பது நாடாளுமன்ற விதிகளை மீறுவதாகும் என்று நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது.

இந்தியர்களின் கறுப்பு பணம் தொடர்பாக ஆராய முந்தைய ஆட்சி காலத்தில், மூன்று விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனம் (NIPFP), தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி குழு (NCAER), மற்றும் நிதி மேலாண்மை தேசிய நிறுவனம் (NIFM) ஆகியவை மூலம் இந்தியர்களின் கறுப்பு பணம் குறித்த விவரங்களை ஆராய முயற்சி எடுக்கப்பட்டது.

இந்த மூன்று நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளும் 2013 டிசம்பர், 2014 ஜூலை, 2014 ஆகஸ்ட் மாதங்களில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகள் நிதித்துறை நிலைக்குழுவிடம் கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக நிதிய மைச்சகம் கூறியுள்ளது. இந்த அறிக்கைகள் நிலைக்குழுவிடம் உள்ளதால், இதில் உள்ள விவரங்களை அளிப்பது நாடாளுமன்றத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் இந்த அறிக்கையில் உள்ள தகவல்களை அளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போதுவரை இந்தியர்களின் கறுப்பு பணம் குறித்த அதிகாரபூர்வமான மதிப்பீடுகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இண்ட கிரிட்டி என்கிற அமைப்பின் சமீபத்திய கணிப்பின்படி 77 கோடி டாலர் மதிப்பிலான கறுப்பு பணம் 2005-2014 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ளது.

இதே காலகட்டத்தில் 16,500 கோடி டாலர் அளவுக்கு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கறுப்பு பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த அமைப்பு சர்வதேச ரீதியில் நிதித்துறை செயல்பாடுகளை கவனித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை கவரும் அம்சங்களில் ஒன்றாக கறுப்பு பண விவகாரம் உருவெடுத்துள்ளது. ஆனால் கறுப்பு பணம் எவ்வளவு உருவாகியுள்ளது. அது எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான நம்பகமான ஆய்வுகள் எதுவும் இல்லை என்று 2011-ம் ஆண்டில் நிதி அமைச்சகம் கூறியிருந்தது. இதனடிப்படையிலேயே இந்த விசாரணை குழுக்கள் உருவாக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x