Published : 20 Jul 2018 09:49 AM
Last Updated : 20 Jul 2018 09:49 AM

வணிக நூலகம்: உச்ச கட்ட செயல்திறன்

செயல் திறன் என்பது அனைவரிடமும் உள்ளது. எந்த அளவிற்கு அதை வெளிப்படுத்துகிறார்கள், எத்தனை பேர் உச்சம் தொடுகிறார்கள் என்பதில்தான் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் வேகமானியில் வெவ்வேறு வகையான நிறங்களை குறிப்பிட்டு இருப்பார்கள் பச்சை, மஞ்சள், சிகப்பு என்று அதைப்போலவே செயல் திறனின் உச்சம் என்பது மிக அதிக முயற்சியின் வெளிப்பாடு என்ற கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எரிபொருள் சிக்கனமும் வண்டிகளின் பாதுகாப்புத் தன்மையும் தேய்மானக் குறைபாடும், பச்சை நிறத்தில் முள் நகரும் போது செயல்படுகிறது.

உச்ச வேகத்தில் செல்லும் போது அதே முள் சிகப்பை தாண்டி விடு கிறது. அதுபோன்ற நேரங்களில் எரிபொருள் விரயம், வண்டிகளின் பாதுகாப்பு தன்மை, தேய்மானம் ஆகியன உச்சத்தில் இருக்கின்றன. பணியாளர்கள் மிகவும் கடின உழைப் பைத் தங்களுடைய திறமைக்கு மேல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது தேய்மானம் ஆவதுடன் மன நலத்தையும், உடல் நலத்தையும் இழக்கிறார்கள். பிராட் ஸ்டுல் பெர்க் மற்றும் ஸ்டீவ் மாக்னெஸ் என்ற நூல் ஆசிரியர்கள் செயல் திறனின் உச்சத்திற்கு சில வழிமுறைகளைக் கூறுகிறார்கள்.

சாதாரணமாகத் தோன்றினாலும், அதைப் படிக்கும் வரை நமக்கு அந்த உணர்வு தோன்றுவதில்லை ஆனால் படிக்க படிக்க அல்லது படித்து முடித்த பின்பு அட இதுதானா இதைத்தான் நாம் செய்கின்றோமே என்ற ஓலக் குரல் ஒலிக்க துவங்குகிறது. மன அழுத்தம் அளவாக இருந்தால் செயல் திறன் மேம்படும். மன அழுத்தம் இல்லாதவர்களோ, மிக அதிக மன அழுத்தம் உள்ளவர்களோ எந்தப் பணியையும் சிறப்பாகச் செய்ய முடியாது. உதாரணமாக கார் சக்கரங்களில் குறைந்த அளவு காற்றழுத்தம் யாருக்கும் பயன் தராது. மிக அதிக அளவிலான காற்றழுத்தம் குலுங்கி குதித்துச் செல்லும் பாணியில் இருக்கும். சரியான மன அழுத்தம் மனதையும் உடலையும் முறையாக இயக்கும்.

சரியான அளவில் மன அழுத்தத்தையும், சரியான அளவில் ஓய்வையும் இணைத்துப் பார்ப்பவர்கள் செயல் திறனுக்குச் சொந்தக்காரர்களாகின்றார்கள். ஒன்று குறைந்து ஒன்று கூடினால் சரியான அளவிலான செயல்திறன் வெளிப்படாது. எப்பொழுதும் சவால் களை எதிர்கொண்டு செய்யும் செயல் கள் செயல்திறனில் குறைபாடுகளைத் தூண்டும். அளவான ஓய்வும், அழுத்தத்தில் இருந்து வெளிவந்த மனப்பாங்கும் சரியான பணியை இன்னும் எதிர்காலத்தில் சிறப்பாகச் செய்யவும் உதவி செய்யும்.

இந்த சரிவிகித செயல்பாடுகளைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். சலித்துப்போக வேண்டாம். மாறாக, அதிகபட்ச மன அழுத்தம் குறைவான ஓய்வு சரி நிகர் விகிதத்தில் அமையாது. சரி நிகராக மன அழுத்தமே இல்லாதவர்கள் மிக அதிக ஓய்வில் இருப்பவர்கள் எதையும் முறையாக எடுத்துக்கொள்ளாமல் சீரிய முறையில் அணுகாமல் விளையாட்டுத் தனமாக இருக்கும் பொழுது செயல் திறன் குறைபாடு மட்டும் அல்லாமல் பணிக்கு பங்கம் வருவதற்கு ஏராளமான பாதைகள் உண்டு. நுண்ணறிவு மிக்க புத்தாக்க முனைவுகளை மேற்கொள்ளும் யாரும் கீழ்கண்ட படிகட்டுகளைக் கடந்து தான் வர வேண்டும்.

1. மூழ்குதல்

2. அடைகாத்தல்

3. நுண்ணறிவு

பணியில் கவனமும், சிறப்பான செயல்பாடும் அமைவதற்கு பணி சார்ந்த நிகழ்வுகளில் மூழ்கி இருத்தல் அவசியம். தலை மட்டும் தண்ணீருக்கு வெளியே இருக்கும் பொழுது உடல் எடை வேறுபடும். தலையோடு நீருக்குள் செல்லும் பொழுது எடை மாறுபடும். அதுபோல மூழ்கும் பொழுது ஈடுபாடும், ஈர்ப்பும் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுகின்றன.

அடைகாக்கும் பொழுது பறவைகள் கடின உழைப்பையோ பறந்து பறந்து இரை எடுப்பதையோ செய்வது இல்லை அந்த நேரத்தில் எடுக்க கூடிய ஓய்வு மற்றும் சலனம் அற்ற தன்மை மறுபடி உயர பறப்பதற்கும், வேறு வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் பயன் தருகிறது. அதைப் போல செயல் திறன் மேம்பட பணியை பற்றி மட்டுமே சிந்திக்காமல் ஓய்வும் தேவை. பணி ஒன்றே வாழ்வின் தாரக மந்திரம் என்பவர் பணி வாழ்வு இரண்டையும் கடைசி வரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மகிழ்ச்சி மிச்சமில்லாமல் போய்விடுகிறது. ஆகவே அடைகாத்தல் அவசியம்.

திரும்ப திரும்ப இயந்திரத்தனமான வேலைகளைச் செய்து கொண்டு இருக்கும் பொழுது செயல் திறன் மேம்படாது. மாறாக, குறையும். எண்ணங்களில் மாற்றம் செய்கைகளில் சுழற்சி ஆகியன புதிய எண்ணங்களையும் வளர்ச்சிப் பாங்கையும் கொண்டு வந்து சேர்க்கும். “அரைத்த மாவையே அரைப்பது” என்ற சொலவடையைப் போல திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயல்கள் மாவு நன்றாக அரைப்பட்டாலும் அதையே திரும்ப திரும்ப அரைப்பது போல செய்த செயல்களை திரும்ப திரும்ப செய்யும் தன்மையை கைவிட வேண்டும்.

வேறு சில முக்கிய புள்ளிகளையும் இணைத்தல் அவசியம் ஆகின்றது. சலனத்தைத் தவிர்த்து ஆழ்ந்த சிந்தனைகளை உள்வாங்கி இலக் கைக் குறிவைத்துச் செல்லும் பொழுது அனைத்தும் சரிவர நடக்கின்றன. தடுப்பணை இருந்தால் தண்ணீர் தேங்கும் அதை போல தடைகள் வந்தால் வளர்ச்சி கூடும். செயல்திறனைத் தாண்டி செல்வதற்கு முனைப்புக் காட்டும்பொழுது செயல்கள் எளிதில் வசப்படுகின்றன.

மாணவர்கள் தாங்களாகவே சிரமப்பட்டு முட்டி மோதி கண்டு பிடிக்க கூடிய பிரச்சினைகளின் தீர்வு கள் அவர்களுக்கு எதிர் காலத்தில் வழிகாட்டியாக இருக்கின்றன. ஆசிரியரே பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பொழுது மாணவர்களின் செயல்திறன் பாதிக்கப்படுகின்றது. மிகவேக அதிதூரம் ஓடுபவர்கள் கடின பயிற்சிகளை மேற்கொள்வார்கள் ஆனால், அவர்களின் செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருக்கும். மிகவும் வலிக்கிறது,

ஆனாலும் நான் ஓடுவேன். ஓடுவதற்கு கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த வலியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வேன். சில மணித் துளிகளில் இவை சரியாகி விடும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் ( Auto Suggestion) தொடர்ந்து ஓடி செயல்திறனை மேம்படுத்தி வெற்றிக்கு சொந்தகாரர்களாகின்றார்கள்.

சோர்வும், முடிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. முடிவுகளில் சோர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாது. மருத்துவர்கள் தாங்கள் எழுதும் மருந்துச் சீட்டில் நேரம் செல்லச் செல்ல கூடுதல் தவறுகளை செய்கிறார்கள். அதே போல நீதிபதிகள் நாளின் முதல் கட்டத்தில் 65 சதவீதம் சிறைக் கைதிகளை பரோலில் செல்ல அனுமதிக்கிறார்கள். அதே நீதிபதி நாளின் கடைசியில் ஒருவரையும் ஒரு சதவீதம் கூட அனுமதிப்பதில்லை. எனவே செயல் திறன் மேம்பட முடிவுகளில் சோர்வு ஏற்படுவதைத் தவிர்ப்பது அவசியம்.

செயல் திறனை அதிகப்படுத்துவது என்பது நாம் செய்யும் பணிகளைக் குறைத்து செயல்பாடுகளைக் குறைத் துக் கொள்வது ஒன்று. நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொண்டு மேலும் மேலும் செயல்திறனை வளர்த்துக் கொள்ளுதல் மற்றொன்று இதில் ஒன்று நமக்கு தேவையில்லை, மற்றொன்றை கைசேர்த்து செயல்திறனை மேம்படுத்தி வெற்றிக்கு வழிதேடுவோம்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x