Published : 18 Jul 2018 09:32 AM
Last Updated : 18 Jul 2018 09:32 AM

அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு உருக்குத் துறையில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும்: மத்திய அமைச்சர் பிரேந்திர சிங் தகவல்

இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரி விதிப்பால் இந்திய உருக்குத் துறையில் மறைமுக பாதிப்புகள் உருவாகும் என்று மத்திய உருக்குத்துறை அமைச்சர் சௌத்ரி பிரேந்திர சிங் தெரிவித்தார்.

இருப்பினும் இந்திய உருக் குத்துறைக்கு வளமான எதிர்காலம் தெரிகிறது. இப்போதைக்கு அதிக அளவிலான உருக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்று தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய உருக்குத்துறை இது போன்ற சவால்களை நிச்சயம் எதிர்கொள்ளும் திறன் பெற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க அரசு இறக்குமதி செய்யப்படும் உருக்கின் அள வைக் குறைப்பதற்காக 25 சதவீத சுங்க வரி விதித்துள்ளது. இதன் காரணமாக இப்போதைக்கு உருக்கு ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்க பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை. இருந்தாலும் பிற நாடுகளிலிருந்து உருக்கு சார்ந்த பொருள்கள் இந்தியாவில் அதி கம் குவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப் பிட்டார். இதுதான் இத்துறைக்கு மறைமுக பாதிப்பாக இருக்கும் என்று சுட்டிக் காட்டினார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவும் இறக்குமதி செய்யப் படும் உருக்கிற்கு அதிக சுங்கவரி விதித்து அறிவித்துள்ளது.

தட்டையான சுருட்டப்பட்ட உருக்கு பொருள்கள் மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 27.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல தட்டையான ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தயாரிப்புகளுக்கு 22.50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் 15 சதவீதமாக இருந்தது. உயர்த்தப்பட்ட வரி விதிப்பு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமைச்சர் கூறினார்.

இறக்குமதி வரி விதிப்பதற்கான தேதியை ஆகஸ்ட் வரை நிர்ணயித்திருப்பதற்கு, பேச்சு நடத்த அமெரிக்காவுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகத்தான் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கெனவே முதல் சுற்று பேச்சுவார்த்தை இரு நாடுகளின் அதிகாரிகளுக்கிடையே நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் அமெரிக்கா மிக முக்கியமான சந்தை என்றும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை அமெரிக்கா நிறுத்தாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

உருக்குத் துறையில் எக்ஸிகியூடிவ் மற்றும் எக்ஸிகியூடிவ் பதவியில் அல்லாதவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க உருக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து செயில் இயக்குநர் குழு நிர்வாகத்தின் நிதி நிலைக்கேற்ப முடிவு செய்யும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x