Published : 17 Jul 2018 02:35 PM
Last Updated : 17 Jul 2018 02:35 PM

‘ஓவர் டைம்’ வேலைக்கு பெற்ற பணத்தை திருப்பிக் கொடுங்கள்: 70 ஆயிரம் ஊழியர்களுக்கு எஸ்பிஐ வங்கி உத்தரவு

பணமதிப்பு நீக்கம் காலத்தில் கூடுதல் நேரம் வேலைப்பார்த்ததற்காக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பிச் செலுத்தக் கோரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனது கிளை வங்கிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளான பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் ஆகியவற்றில் பணியாற்றி கூடுதல் நேரம் வேலைபார்த்து ஊதியம் பெற்ற 70 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டு வந்தார். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், மக்கள் தங்களிடம் செல்லாத ரூபாய்நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, நவம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரை வங்கநேரம் முடிந்தபின், இரவு 7 மணிக்கு மேலாகவும் ஊழியர்கள் வேலைபார்த்தனர். இதில் ஊழியர்கள் உரிய நேரத்துக்கு வீட்டுக்குச் செல்ல முடியாமலும், சாப்பாடு இல்லாமல், தங்கள் சொந்த செலவில் சாப்பிட்டும் ஏராளமாகச் செலவு செய்துள்ளனர்.

இதையடுத்து கூடுதலாக வேலை செய்த நேரத்துக்கு ஊதியம் கேட்டு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி ஊழியர்களின் கூடுதல் வேலைநேரத்தைக் கணக்கிட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கியுடன், பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர், பேங்க் ஆப் பாட்டியாலா ஆகியவை இணைந்தபின், முன்பு பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையின் போது பணியாற்றியதற்கான தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்ட தொகையை திருப்பி தருமாறு எஸ்பிஐ வழங்கி கோரியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்றியதற்கான தொகையை தற்போது ஸ்டேட் பாங்கிடம் இருந்து பெறுவது சரியான நடைமுறை அல்ல, எனவே அதனை திருப்பி தர வேண்டும் என ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், கூடுதல் நேரம் வேலைபார்த்தமைக்காக ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம், எந்த அடிப்படையில், எந்தச் சூழலில் தரப்பட்டது என்பதை அறிய விசாரணை நடத்துங்கள்,  ஒருவேளைத் தவறான சூழலில் ஊதியம் தரப்பட்டு இருந்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெறுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின்படி, எஸ்பிஐ வங்கியுடன் இணைந்த துணை வங்கிகளைச் சேர்ந்த 70 ஆயிரம் ஊழியர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு, பணம் திரும்ப பெறப்பட உள்ளது.

இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர், ஜெய்பூர் வங்கியில் பணியாற்றும் ஒருஊழியர் கூறுகையில், ‘‘எஸ்பிஐ வங்கி அனுப்பிய சுற்றறிக்கை உண்மையில் நியாயமில்லாதது. பணமதிப்புநீக்க காலத்தில் நாங்கள் இரவு பகலாக வேலை செய்தோம். எங்களுக்கு அந்த பணம் கருணைத் தொகையாகவோ, போனஸாகவோ தரப்படவில்லை. இப்போது நாங்கள் எஸ்பிஐ ஊழியர்களாக மாறி விட்டோம். எஸ்பிஐ நிர்வாகத்தின் இந்தச் செயல் நியாயமில்லாதது, ஊழியர்களின் வேலைத்திறனை கடுமையாகப் பாதிக்கும் எனவேதனை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x