Last Updated : 17 Jul, 2018 10:41 AM

 

Published : 17 Jul 2018 10:41 AM
Last Updated : 17 Jul 2018 10:41 AM

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் உரிமைகோராத கணக்குகளில் ரூ.300 கோடி

பல ஆண்டுகளாக செயல்படாத மற்றும் உரிமையாளர்களை கண்டறியமுடியாத வங்கி கணக்குகளின் பட்டியலை சுவிஸ் வங்கிகள் மூன்றாவது ஆண்டாக வெளியிட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளிலுள்ள ரூ.300 கோடி அளவுக்கான தொகையை உரிமைகோர இதுவரை யாரும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக கடந்த 2015-ம் ஆண்டு சுவிஸ் நாட்டினர் மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் செயல்படாத கணக்குகளை உள்ளடக்கிய பட்டியலை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. செயல்படாத கணக்குகள் கண்டறியப்படுவதற்கு ஏற்ப இந்தப் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு மூன்றாவது ஆண்டாக தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் அல்லது சட்டபூர்வ வாரிசுகள் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து இந்தக் கணக்குகளிலுள்ள தொகையைப் பெற முடியும்.

2017-ம் ஆண்டில் 40 செயல்படாத சுவிஸ் வங்கி கணக்குகளிலுள்ள தொகை இந்த முறையின்மூலம் வெற்றிகரமாக உரிமைகோரப்பட்டுள்ளதாக சுவிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இந்தப் பட்டியலில் இன்னமும் 3,500 செயல்படாத சுவிஸ் வங்கி கணக்குகள் இடம்பெற்றுள்ளன. டிசம்பர் 2015-ல் இருந்து 6 இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

உலக அளவில் நிதி சார்ந்த சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து கருதப்பட்டு வந்தது. இருப்பினும் ஸ்விஸ் வங்கிகளின் மூலம் நிகழும் வரி ஏய்ப்புகள் குறித்து உலக அளவில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து தனது விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் தனது சட்டங்களையும் சுவிட்சர்லாந்து மாற்றியமைத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுடனும் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. சுவிஸ் தேசிய வங்கியின் (எஸ்என்பி) சமீபத்திய தரவுகள்படி 2017-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை முன்பைவிட 50 சதவீதம் அதிகரித்து ரூ.7,000 கோடியாக உள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் முழுமையும் கருப்பு பணம் அல்ல என இதுதொடர்பாக மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள மொத்த பணத்தில் இந்தியர்களின் பங்களிப்பு 0.07 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்படாத கணக்குகளின் பட்டியலைப் பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்த 3 பேரின் கணக்குகளும், இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேரின் கணக்குகளும் 2015-ம் ஆண்டு டிசம்பரிலிருந்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தனித்தனியாக இந்தக் கணக்குகளில் எவ்வளவு தொகை உள்ளது என்பது தெரியவில்லை, ஒட்டுமொத்தமாக ரூ.300 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குள் செயல்படாத கணக்குகளாக பட்டியலிடப்பட்டவற்றுக்கு உரிமை கோரப்பட வேண்டும். எனவே 2020-ம் ஆண்டுவரை இந்தப் பட்டியலில் இவர்கள் பெயர் இடம்பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x