Published : 10 Jul 2018 08:18 AM
Last Updated : 10 Jul 2018 08:18 AM

இந்தியாவுக்கு திரும்ப அழைப்பதன் நோக்கமே தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்குத்தான்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு

பொதுத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தன்னை இந்தியாவுக்கு திரும்ப அழைப்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனில் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய் மல்லையா, தனது பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் நீதிமன்றம் குறிப்பிடும் இடத்தில் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக நீதிமன்ற அதிகாரிகள் தனது வீட்டிற்கு வரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள சொகுசு வீடு தனது குழந்தைகளின் பேரில் உள்ளது அதேபோல மற்றொரு வீடு தனது தாயாரின் பெயரில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்துக்கு அளித்த பிரமான பத்திரத்தில் லண்டனில் தனது பெயரில் உள்ள சொத்துகளின் விவரத்தை அளித்துள்ளதாகவும், அந்த சொத்துகளை முடக்கி அவற்றை வங்கியில் ஒப்படைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சில கார்கள் மற்றும் நகைகள் மட்டுமே தனது பெயரில் உள்ளதாக மல்லையா தெரிவித்துள்ளார்.

தனக்கு வீடே இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி தனது பெயரில் உள்ள சொத்துகளை எடுத்துக் கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டதாக விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மொனாகோவில் உள்ள உல்லாச படகு சமீபத்தில் ஏலம் விடப்பட்டதாகவும், அந்தப் படகை பராமரிப்பவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருந்ததால் அது ஏலம் விடப்பட்டது என்றும் இதன்படி ஓராண்டில் ஒரு மாதம் மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள ஏலம் எடுத்த நபர் அனுமதித்துள்ளதாக மல்லையா குறிப்பிட்டார்.

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளார். இதனால் பிரிட்டன் கிராண்ட்பிரீ போட்டிகளைக் காண மட்டும் அவரால் முடிந்தது.

வங்கிகளில் ரூ 12.500 கோடி அளவுக்குக் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் தப்பியோடிவிட்ட விஜய் மல்லையா மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகளை அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்துள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கெதிராக ரெட் கார்னர் நோட்டீஸும் இன்டர்போல் போலீஸாரால் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் ரூ. 13,900 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்று வங்கிகளுக்கு அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனது தந்தை 1920-ம் ஆண்டில் வாங்கிய சொத்து எனக்கு வந்தது. அதை அன்னியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையை எவ்விதம் நியாயப்படுத்த முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த விஜய் மல்லையா, இவர் தற்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x