Published : 09 Jul 2018 08:44 AM
Last Updated : 09 Jul 2018 08:44 AM

நிதி சார்ந்த மோசடி வழக்குகளுக்கு தீர்வுகாண நிபுணர்களின் உதவியை நாடுகிறது சிபிஐ

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.13,000 கோடி மோசடி மற்றும் இதர மோசடிகளை விசாரிப்பதற்கு நிபுணர்களின் உதவியை சிபிஐ நாட இருக்கிறது. வங்கி அதிகாரிகள், வரி நிபுணர்கள், இதர அமைச்சரவை அதிகாரிகளைத் தற்காலிகமாக பணியமர்த்த சிபிஐ திட்டமிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக சிபிஐ பல அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. வங்கி, அந்நிய வர்த்தகம், அந்நிய செலாவணி, வரி ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிபுணர்கள் தேவை என நிதி அமைச்சகம் உள்ளிட்ட இதர அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் நிபுணர்கள் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் சிபிஐ-ல் பணி அமர்த்தப்படுவார்கள்.

இதர அமைச்சகங்களில் இருந்து வரும் நிபுணர்களுக்கு அவர்களுடைய அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதம் அளவுக்கு சிறப்பு தொகை கூடுதலாக வழங்கப்படும். அதேபோல சிபிஐ சிறப்புப் பணிக்கு வரும் நிபுணர்கள் பாதியில் வெளியேற முடியாது என்றும் சிபிஐ தெரிவித்திருக்கிறது. வங்கி மோசடி, அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்ட பல மோசடி வழக்குகள் தற்போது அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் உதவியுடன் இது போன்ற நிதி சார்ந்த மோசடி வழக்குகளில் தீர்வு காணமுடியும் என சிபிஐ தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x