Published : 09 Jul 2018 08:41 AM
Last Updated : 09 Jul 2018 08:41 AM

ஆண்டு வரித்தாக்கல் படிவம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் 21-ம் தேதி ஆலோசனை

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் 21-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஆண்டு வரித்தாக்கல் படிவத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என தெரிகிறது. வரி மோசடியை தடுக்க அரசு திட்டமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஆடிட்டிங் நிறுவனங்கள் வரித்தாக்கல் படிவத்தில் சில சமரசங்களை எதிர்பார்க்கின்றன.

கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. முதல் நிதி ஆண்டு முடிவடைந்த நிலையில் நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு தாக்கலை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டும். 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கும் நிறுவனங்கள் ஆண்டு வரித்தாக்கலுடன், ஆடிட் அறிக்கைகளும் தாக்கல் செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக வரைவு வரித்தாக்கல் படிவத்தை வரித்தாக்கல் அதிகாரிகள் தயார் செய்துவிட்டனர். இந்த படிவம் தொடர்பாக வரும் 21-ம் தேதி விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மாநில நிதி அமைச்சர்கள், ஜிஎஸ்டிஎன் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மதிப்பு கூட்டு வரி முறை (வாட்) இருந்த போது உள்ள வரித்தாக்கல் படிவமே தற்போதும் இருக்க வேண்டும் என ஆடிட்டர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். வரும் அக்டோபருக்குள் இந்த படிவம் ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்றும் ஆடிட்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இஒய் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் அபிஷேக் ஜெயின் கூறும்போது, ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டு ஓர் ஆண்டு மட்டுமே முடிவடைந்திருக்கிறது. அதனால் வரித்தாக்கல் படிவம் எளிமையாக இருக்குமாறு வடிவமைக்கலாம். பான் எண்ணை அடிப்படையாக வைத்து இந்த படிவம் இருக்க வேண்டும். தவிர மாநில அளவிலான ஜிஎஸ்டி எண்ணை அடிப்படையாக வைத்து வரித்தாக்கல் படிவம் இருக்க கூடாது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மாநில அளவில் வருமானத்தை வகைப்படுத்தவில்லை என்றார்.

ஏஎம்ஆர்ஜி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ரஜத் மோகன் கூறும்போது, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு மட்டுமே முடிவடைந்திருப்பதால் ஆடிட் கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றார். 1.14 கோடி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் பதிவு செய்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x