Last Updated : 06 Jul, 2018 09:07 AM

 

Published : 06 Jul 2018 09:07 AM
Last Updated : 06 Jul 2018 09:07 AM

வணிக நூலகம்: தலைமை சந்திக்கும் சவால்கள்

லைமை என்ற சொல்லுக்கு சவால் என்ற சொல் எப்பொழுதும் எதிரில் நின்று கொண்டே இருக்கும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் சவால்களை எப்படிச் சந்திப்பது என்பது குறித்து ஜிம் கௌஸஸ் மற்றும் பாரி போஸ்னெர் என்ற நூல் ஆசிரியர்கள் ஐந்து பதிப்புகளாக இருபத்து ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி புத்தகங்களுக்கு மேல் இருபத்து இரண்டு மொழிகளில் விற்று தீர்ந்த அதே புத்தகத்தை புதிய கோணங்களோடும், புதிய கருத்துகளோடும் வெளிக் கொண்டு வந்துள்ளார்கள். அதைப் பற்றி கூறும் பொழுது, இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் பொழுது ஏதோ ஒரு புனித நூலை படித்த உணர்வு மேலோங்குவதாக பலர் பதிவு செய்து இருக்கிறார்கள்.

தலைமை என்பது எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லா அமைப்புகளிலும் எப்போதும் தேவைப்படும் ஒன்று. யார் தலைவர்கள் என்பதில் தீர்வு இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் தலைமைக்கு மணி மகுடம் சூட்டுகிறது. லாப நோக்கம், லாப நோக்கம் அல்லாத நிறுவனங்கள், விவசாயம், வங்கிகள், உடல் நலம், கல்வி மற்றும் அரசாங்கம் சார்ந்த துறைகள் என்று அனைத்து அமைப்புகளிலும் தலைமை தலையாயதாக உள்ளது. தலை சிறந்தவர்களாக இருந்தால் வெற்றியடைந்து நிறுவனத்தின் தலையைத் தக்கவைக்கின்றார்கள். மாறாக, சவால்களை சந்திக்கும் திராணியில்லாத தலைவர்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் இழந்து அந்த நிறுவனத்தின் இதயத்தையும் குதறி விடுகிறார்கள். சரியான, திறமையான தலைமைக்கு வயது, இனம், பாலினம், குடும்பம், மதம், கலாசார பின்புலம் போன்ற எதுவும் தேவையில்லை. மேற்கூறிய எந்த ஒரு காரணியும் இல்லாத நபர்கள் கூட செயல்கள் மூலமும் சிந்தனை மூலமும் போற்றுதலுக்குரிய தலைவர்கள் ஆகின்றார்கள்.

மிகச் சிறந்த தலைமை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தொழில் ஆகும். இடம், பொருள், ஏவல் மற்றும் பணியமைப்பு, பதவி, செல்வம் இவை எதுவுமே சிறந்த தலைமைக்கு படிக்கட்டுகளாக இருந்ததாக சரித்திரத்தில் இடம் இல்லை என்று நூல் ஆசிரியர்கள் மிக தெளிவாக கூறுகின்றார்கள். கீழ் காணும் ஐந்து கருத்துகளைச் சவால்களை சமாளிக்கும் காரணிகளாக குறிப்பிடலாம்.

1. வழியைச் சீரமைத்தல், 2. பகிர்ந்த பார்வை மூலம் உணர்வூட்டுதல், 3. செயல்முறைகளை எதிர்த்தல், 4. மற்றவர்களைப் பணித்தல், 5. மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

வழியைச் சீரமைத்தல்

சரியான வழியில் செல்லும் பொழுது தடைகள் குறைவு, வெற்றி வசப்படும். பண்புகளைப் பற்றிய தெளிவான சிந்தனை முன்மாதிரியான செயல்பாடுகள் ஆகியவை முதல் படியில் இருந்து மேல் நோக்கி அனுப்பி வைக்கும். சரியான நிறைவான பண்பில்லாதவர்கள் தலைமை தாங்க முடியாது. முன்மாதிரியாக இல்லாதவர்கள் அட்டைக் கத்தி வீரர்களாகவும், வார்த்தைப் பந்தல்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்களால் தலைமைக்குச் சிறப்பு சேர்க்க முடியாது. தலைமைக்கு சிறப்பு சேர்க்க இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு சீரிய பண்புகளையும் முன் மாதிரி நடத்தைகளையும் மற்றவர்கள் பின்பற்ற அவர்கள் வரும் வழியைச் சீரமைத்துக் கொடுத்தல் சவாலான செயல் ஆகும்.

பகிர்ந்த பார்வை மூலம் உணர்வூட்டுதல்

தொலைநோக்கு பார்வையும் எதிர்காலத் திட்டமிடுதலும் சிறந்த தலைமைக்கு அழகு. அவ்வாறு எதிர்கால திட்டமிடுதலில் உடன் இருப்பவர்களை இணைத்து அவர்களுடைய பங்காற்றலையும் பங்களிக்கச் செய்யும் பொழுது தலைமை மிளிர்கிறது. ஆனால் அவ்வாறு திட்டமிடுதலிலும், பணியாளர்களை இணைப்பதிலும் மிகப் பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். அந்த சவால்களைச் சந்தித்து வழிநடத்தும் தலைவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் ஆகின்றார்கள். பெரும்பாலும் நிறுவனங்களிலோ அமைப்புகளிலோ தொலைநோக்கு பார்வைகளும் எதிர்காலத் திட்டமிடுதலும் அவசர சிகிச்சை பிரிவிலேயே இருக்கின்றன. எந்த பாதிப்பும் இல்லாத சுயமான சுதந்திரமான செயலாற்றும் முறைகளுக்கு சிறந்த தலைமையே காரணம்.

செயல்முறைகளை எதிர்த்தல்

தலைவர்கள் தலைமை தாங்குவது என்ற ஒரு நிகழ்ச்சியை மட்டும் செய்து சாதிக்க முடியாது. மாறாக, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் வாய்ப்புகளைச் சல்லடை போட்டு சலித்து எடுக்க வேண்டும். வாய்ப்புகளை வாங்க முடியாது. அவைகளை உருவாக்குவது தான் தலைமையின் சிறப்பு. புதுமை புகுத்தலும் சோதனை முறையிலும் செயல்களைச் செய்தலும் தலைமைக்குச் சவால்விடும். அந்த சவால்களை எதிர்கொண்டு உடன் இருப்பவர்களையும் ஒரு சேர நீந்தி வெள்ளத்தைக் கடப்பது தான் தலைமையின் சவால்கள். முயற்சி செய்தலும் முயன்று பார்த்தலும் சவால்கள்தான். எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் காலத்தை விழுங்கிவிட்டு இடத்தை காலி செய்யும் பொழுது அது வெற்றிடமாகவே இருக்கின்றது. மறுபடியும் எந்த பயிறும் அங்கு விளையாது. செயல்முறைகளைத் திரும்பத் திரும்ப செய்துக் கொண்டே இருந்தால் அவற்றில் சுணக்கம் ஏற்படும். எந்த ஒரு செயலையும் செய்யும் முன் ஏன் என்ற கேள்வியும், எதற்காக என்ற துணை கேள்வியும் புதிய சவால்களைத் தலைமைக்கு உண்டாக்கும். அதுபோன்று இல்லாத நேரங்களில் தலைமை ஒளிராது. மாறாக, ஒளிந்து கொள்ளும். வாய்ப்புகளை ஏற்படுத்துவது என்பது நிறுவனங்களுக்கும் உடன் பணிபுரிபவர்களுக்கும், அண்மையில் இருப்பவர்களுக்கும் புதிய உத்திகள் மூலம் முன்னேற்றத்தை காண்பிப்பது ஆகும். மாறாக, செக்கு மாட்டு தலைவர்கள் எந்த காலத்திலும் மற்றவர்களால் போற்றப் பட்டதும் இல்லை. சவால்களை எதிர் கொண்டதும் இல்லை.

மற்றவர்களைப் பணித்தல்

தானே அனைத்தையும் செய்தல் தலைமைக்கு அசிங்கம். மற்றவர்களைச் செயல்புரிய அனுமதித்து வழிநடத்தி பெரும் வெற்றிகளை மற்றவர்கள் குவிப்பதைக் கண்டு மகிழ்ச்சி கொள்வது தலைமைக்கு மிகப் பெரிய சவால் ஆகும். ஏனென்றால், எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும் தானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலைமையை தரை இறக்கிவிடும். மற்றவருக்கு வாய்ப்பளிப்பது என்பது மிகப்பெரிய சவால் மற்றவர்கள் பணி செய்யும் பாணியில் அழைத்துச் செல்வது முள் பாதையில் நடப்பதற்கு ஒப்பாகும். அவ்வாறு செய்யும் பொழுது மற்றவர்களும் சக்தி பெறுகிறார்கள். அவர்களின் அந்த சக்தி புதிய தலைவர்கள் உருவாக உதவுகிறது. இல்லையேல் சட்டிக்குள் குதிரையோட்டும் கலையாக மற்றவர்கள் இருக்க எதைப்பற்றியும் கவலையில்லாத தலைவர்கள் சவால்களைச் சந்திக்க மறந்து மற்றவர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற முடியாமல் போகின்றது.

மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்தல்

எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகச்சரியான சவாலாகும். ஏனென்றால், பெரும்பான்மையான தலைவர்கள் உயிரற்ற எண்களை உற்சாகமாக பேசிக்கொண்டிருப்பார்கள். மாறாக, உயிரோட்டம் உள்ள வார்த்தைகளால் பணிகளின் பண்பை எடுத்துக் கூறுவது மிகப்பெரிய சவால் சாதரணமாக மேற்பொறுப்பில் உள்ளவர்கள் கீழே பணியாற்றுபவர்களை அடையாளம் கண்டு உடன் அழைத்துச் செல்வதில்லை. வெற்றியை மற்றவர்களுக்கு கொடுப்பதால் மற்றவர்கள் தலைவர்களை த் தாங்கிப்பிடிக்கிறார்கள். வெற்றியைத் தானே தாங்குபவர்கள் மற்றவர்களால் தாங்கி பிடிக்காமல் எளிதில் விழுந்து விடுகிறார்கள். இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் பொழுது தலைமை ஒளிர்கிறது. எதிர்காலத்தைச் சென்றடையும்பொழுது உடன் இருப்பவர்களை அதே உணர்வுடன் அழைத்து செல்வது தலைமையின் மிகப் பெரிய சவால்.

மேலே கூறிய ஐந்து அடுக்குகளை அடுக்கி சவால்களைச் சந்திக்கும் தலைவர்கள் செயற்கரிய தலைவர்கள் ஆகின்றார்கள். செயற்கரிய தலைவர்களை தேடுவோம், மாற்றுவோம், மாறுவோம்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x