Published : 06 Jul 2018 09:05 AM
Last Updated : 06 Jul 2018 09:05 AM

உலகமயமாகிய பருத்தி வர்த்தகம்; பஞ்சு விலை 8 மாதங்களில் 25 சதவீதம் அதிகரிப்பு- விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்படுமா?

பருத்தி வர்த்தகம் சர்வதேசமயமான நிலையில் கடந்த 8 மாதங்களில் 25 சதவீதத்துக்கும் மேல் பஞ்சு விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள், நூற்பாலைகள் என இரு தரப்பினரும் பயனடையும் வகையில், பருத்தி விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென ஜவுளித் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:

நியூயார்க் காட்லுக் இன்டெக்ஸ், சீனாவின் பருத்தி கொள்முதல் கொள்கை, விவசாயிகள் மற்றும் பருத்தி அரைவை ஆலைகளின் இருப்பு வைக்கும் திறன், இந்திய பொருள் சந்தையின் தாக்கம், சர்வதேச பெரு நிறுவனங்களின் தலையீடு, சமூக வலைதளங்களால் பரவும் வதந்திகள், பருத்தி அரைவை ஆலைகளின் உற்பத்தி தொடர்பாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் இல்லாதது, சர்வதேச பெரு நிறுவனங்கள் இந்தியாவில் பருத்தியை வாங்கி, இருப்புவைத்து விற்பனை செய்வது உள்ளிட்டவை பருத்தி விலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக மாறியுள்ளன. இதனால் பருத்தி விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்த மாறுபட்ட சூழலை நூற்பாலையினர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை நடுத்தர நீள இழை பருத்தி மற்றும் நீண்ட இழை பருத்திக்கான விலையையும் 26 சதவீதத்துக்குமேல் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2017 நவம்பர் மாதம் ஒரு கண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.38500-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.48500-ஐக் கடந்துவிட்டது. இந்த விலை உயர்வின் தாக்கம் ஜவுளித் துறை முழுவதும் இருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை ஓராண்டுக்கு ஒரு கோடி பேல் பருத்தி, நூற்பாலைகளுக்குத் தேவைப்படுகிறது. நூற்பாலைகள் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பருத்தியைக் கொள்முதல் செய்கின்றன. அக்டோபர் முதல் செப்டம்பர் வரை பருத்தி சீசன் இருக்கும். கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் 1200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் நூல் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகித்தாலும், ஒரு ஹெக்டேரில் சுமார் 550 கிலோ பருத்தி மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, சைனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 1000 கிலோவுக்கு மேல் விளைச்சல் கிடைக்கிறது. எனவே, ஒரு ஹெக்டேரில் குறைந்தபட்சம் 1000 கிலோ பருத்தி விளைச்சல் கிடைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, விவசாயிகளிடம் அதைக் கொண்டுசெல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி, பஞ்சாலை, நூற்பாலையினரும் பயனடைவர். ஆயத்த ஆடை ஏற்றுமதியும் அதிகரிக்கும். எனவே, விளைச்சல் திறனை அதிகரிக்க சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகும்.

மாறுபட்ட சூழல்

நூல் உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குவோருக்கிடையே புரிதலை உண்டாக்க வேண்டும். நூற்பாலைகள், வங்கிகள் மூலம் பொருள் கடன் பெற்று, பருத்தியை வாங்கி, குறிப்பிட்ட கால அளவுக்கு இருப்புவைக்க வேண்டும். இயற்கை பருத்தியை மட்டும் சார்ந்திராமல், பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கைப் பஞ்சு பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும். பொருள் வர்த்தக சந்தையில் நூற்பாலைகளும் பங்குபெற வேண்டும். குறைந்தபட்சம் இரு மாதங்களாவது இறக்குமதி பஞ்சைப் பயன்படுத்த வேண்டும்.

நூற்பாலையினர் ஒன்றிணைந்து, சந்தை நிலவரங்களைப் பகிர்ந்து, உரிய சமயத்தில் சரியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். பருத்தி அரைவை ஆலைகள் உற்பத்தி செய்யும் பஞ்சு பேல்களின் அளவை துல்லியமாகக் கணக்கிட்டு, மாதந்தோறும் புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிடுவதன் மூலம், ஊக வணிகங்களைக் கட்டுப்படுத்தலாம். ஜவுளித் துறையின் சீரான வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, ஜவுளித் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x