Last Updated : 29 Jun, 2018 05:53 PM

 

Published : 29 Jun 2018 05:53 PM
Last Updated : 29 Jun 2018 05:53 PM

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உள்நாட்டில் உற்பத்தி பாதிப்பு, பற்றாக்குறை ஏற்படும்; ஆய்வில் தகவல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டதால் உள்நாட்டில் உற்பத்தி பாதிப்பும், பற்றாக்குறையும் ஏற்படும் என்று ஐசிஆர்ஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது, உடல்நலக்குறைவு ஏற்படுகிறது எனக் கூறி மக்கள் 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினார்கள்.

100-வது நாள் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு மின் இணைப்பைத் துண்டித்த தமிழகஅரசு, நிரந்தரமாக அந்த ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது. இதனால், கடந்த மாதம் 28-ம் தேதியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இது குறித்து தொழில் ஆய்வு மற்றும் கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான ஐசிஆர்ஏ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டதால், உள்நாட்டில் தாமிரத்துக்கான உற்பத்தி தேவை அதிகரிக்கும். இதுவரை உள்நாட்டில் தாமிரத்தின் உற்பத்தி மிதமிஞ்சிய அளவில் இருந்தநிலையில், இனிமேல்பற்றாக்குறையும் ஏற்படும்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ஏற்படும் உற்பத்தி பற்றாக்குறையால், தாமிரப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் தொழிற்சாலைகள், தொழில்முனைவோர்கள் சந்தையில் தேவைக்கு ஏற்றார் போல் தாமிரம் கிடைக்காமல் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படுவார்கள்.

தாமிரம் வெளிநாடுகளில் விலை அதிகம் என்பதால், அதை இறக்குமதி செய்யும் போது, மத்திய அரசுக்கும் அதிகமான செலவாகும், இறக்குமதி செய்வதும் கடினமாக இருக்கும். இதனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தாமிரப் பொருட்களின் விலை உயரும்.

மேலும் சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தடைகள், ஆலைகள் மூடல் நடவடிக்கை, இயற்கைவளங்கள் குறைந்துவருவது போன்றவற்றால், தாமிரத்தின் விலையை எதிர்காலத்தில் அதிகரிக்க வைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x