Published : 29 Jun 2018 08:51 AM
Last Updated : 29 Jun 2018 08:51 AM

இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி: ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்?

அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்கவோ அல்லது நிறுத்தவோ பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் அறிந்த அதிகாரிகள் கூறினர். ஈரானுடனான வர்த்தக உறவுகளை அமெரிக்கா முறித்துக் கொண்டதிலிருந்தே இந்தியா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்வதற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறினர்.

அமெரிக்காவின் இந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளமுடியாது என இந்தியா அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த தடையை பின்பற்றுகிறது என்றனர். சீனாவுக்கு அடுத்து ஈரானிலிருந்து அதிக கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவின் இந்த தடையை இந்தியாவால் எதிர்க்க முடியும். ஆனால் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சகம் நேற்று நடத்திய கூட்டத்தில், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக வேறு வாய்ப்புகளை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளது என்றனர்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை கடுமையாக குறைப்பது அல்லது நிறுத்துவது என்கிற சூழல் உருவானால், அதை எதிர்க் கொள்ள தயாராக இருக்குமாறு எண்ணெய் நிறுவனங்களை பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் கூறுகையில், இந்த சூழலை மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து வருகிறோம். இந்தியாவின் பெட்ரோ லிய தேவைகளுக்கு ஏற்ப மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம் என்றார்.

அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்தை திரும்ப பெற்றார். ஈரான் உள்பட ஆறு கச்சா எண்ணெய் நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

இதற்கிடையே பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், அமெரிக்கா இந்தியாவுக்கு எந்த நெருக்கடியும் அளிக்கவில்லை. நமது தேவைக்கு ஏற்பவே முடிவுகளை மேற்கொள்வோம் என்றார். கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் ஒரு நாட்டிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யவில்லை. புருனே நாட்டிலிருந்து இறக்குமதிக்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அமெரிக்காவின் இந்த தடையால், உலக அளவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நயாரா எனர்ஜி நிறுவனமும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்தியன் ஆயில், மங்களூரு ரிபைனரீஸ் ஆகியவையும் ஈரானிலிருந்து அதிக இறக்குமதி செய்கின்றன. -டிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x