Published : 25 Jun 2018 08:08 AM
Last Updated : 25 Jun 2018 08:08 AM

ஆடிட்டர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்: நிறுவன விவகாரத் துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி தகவல்

ஆடிட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக நிறுவன விவகாரத் துறை இணை அமைச்சர் பி.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் ஆளுகை அமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு புகார்கள் காரணமாக சில தணிக்கை அமைப்புகள் நிறுவன விவகாரத் துறையின் கண்காணிப்பில் இருப்பது, நிறுவனங்களில் இருந்து தொடர்ச்சியாக ஆடிட்டர்கள் வெளியேறி வருவது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆடிட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கான விதிமுறைகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு தொழிலாளர் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தேசிய நிதி அறிக்கை ஆணையம்

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தை (என்எஃப்ஆர்ஏ) அமைப்பதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடிட்டிங் தொழிலை கண்காணிக்கும் சுயாட்சி அமைப்பாக இது இருக்கும்.

என்எஃப்ஆர்ஏ தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணி யில் அமர்த்துவதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களை என்எஃப்ஆர்ஏ விசாரிக்கும் என்றும் பி.பி. சவுத்ரி தெரிவித்தார். பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத என எல்லா நிறுவனங்களும் இந்த அமைப்பின் வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆடிட்டர்கள் மீது புகார்

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் ஆடிட்டர்கள் மீதான 10 முதல் 15 புகார்களை நிறுவன விவகாரத் துறை விசாரித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். நிறுவனம் அல்லது அதன் பங்குதாரர்களை ஏமாற்றும் வகையில் ஆடிட்டர்கள் நடந்துகொள்ளும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை 2013-ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதி சார்ந்த தகவல்களை நிறுவனங்கள் முழுமையாக தராதது மற்றும் பிற காரணங்களால் ஆடிட்டர்கள் நிறுவனங்களிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருவது குறித்து அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்த சவுத்ரி, நிறுவன பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ள செயல்படாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்களின் திவலாக்க நடவடிக்கைகள் (ஐபிசி) சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு நிறுவன விவகாரத்துறை அமைச்சகம் முன்னுரிமை அளிக்கும் என்றார்.

நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

நீண்ட நாட்களாக எந்த தொழில் சார்ந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத சுமார் 2.25 லட்சம் நிறுவனங்களுக்கு நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிறுவனங்கள் இந்த நோட்டீஸுக்கு அளிக்கும் பதிலுக்கு ஏற்ப நிறுவன பதிவேட்டில் இருந்து இவற்றை நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக செயல்படாத மற்றும் வரித் தாக்கல் செய்யாத 2.26 லட்சம் நிறுவனங்களை பட்டியலில் இருந்து அமைச்சகம் சமீபத்தில் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x