Last Updated : 10 Jun, 2018 01:49 PM

 

Published : 10 Jun 2018 01:49 PM
Last Updated : 10 Jun 2018 01:49 PM

எகிறப்போகிறது தங்கம் விலை: தீபாவளிக்குள் ஒரு பவுன் ரூ.34 ஆயிரமாக உயரலாம்

சர்வதேச அரசியல் சூழல்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால், தீபாவளிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்தை எட்டும் வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால்,அதை அதிகமான விலை கொடுத்து வாங்கும் பொருட்டு டாலரின் தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தேவை அதிகரித்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ரூ.67.53 காசுகளாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல், சர்வதேச அரசியல் சூழல் காரணமாகவும், ரூபாயின் மதிப்பில் நிலையற்ற தன்மை இல்லை. இதனால், தங்கத்தின் விலையிலும் அதிகமான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

ஜூன் 1-ம் தேதி முதல் இன்று வரை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.260 அதிகரித்துள்ளது. இதனால், 8 கிராம் கொண்ட ஆபரணத் தங்கத்தின் மதிப்பு ரூ.23,760 ஆக உள்ளது. இந்த மாதத்தில் குறைந்தபட்சமாக பவுனுக்கு ரூ.23,496 இருந்தநிலையில், இந்த விலை உயர்வு வந்துள்ளது.

இந்நிலையில், தீபாவளிக்கு முன்பாக தங்கத்தின் தேவை காரணமாகவும், டாலரின் மதிப்பு உயர்வாலும், தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.34 ஆயிரமாக அதிகரிக்கும்வாய்ப்பு இருக்கிறது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கமாடிட்டி டிரேட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஞானசேகர் தியாகராஜன் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சந்தையில் தங்கம் பவுனுக்கு ரூ.34 ஆயிரத்தை எட்டிவிடும் என்று கருதுகிறோம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1260 முதல் 1400 டாலர் வரை உயரக்கூடும்.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத உயர்வு, சர்வதேச அரசியல் சூழல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு ஆகியவற்றால், தங்கத்தின் விலை உயரக் காரணமாக இருக்கும்.

கடந்த 8-ம் தேதி நிலவரப்படி 10 கிராம தங்கத்தின் விலை ரூ.31,10 ஆகவும், அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,302.70 டாலராகவும் இருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தி, வலுப்படுத்தும் பட்சத்தில் தங்கத்தின் விலையை உள்நாட்டுச் சந்தையில் உயராமல் தடுக்கலாம். ஆனால், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புச் சரிவை தடுப்பது என்பது கடினமானதாகும். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும்பட்சத்தில் மக்களின் முதலீடு தங்கத்தை நோக்கித் திரும்பு அப்போது தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயரும். மேலும், பருவமழை சாதகமாக இருப்பது, பண்டிகை காலம், வேளாண்மை சிறப்பாக இருத்தல் போன்றவற்றால், மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.இதனால், தீபாவளி நேரத்தில் தங்கத்துக்கான தேவை உயர்ந்துவிலை அதிகரிக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.

கமாடிட்டி அன்ட் கரன்சி மேனேஜ்மென்ட் இயக்குநர் பிரித்தி ரதி கூறுகையில், சர்வதேச சந்தை சூழல்கள், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு, பணவீக்கம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, தீபாவளிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்தை எட்டும் என நினைக்கிறேன். 2018-ம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ.31,800 வரை உயர்ந்து நிலை பெறக்கூடும், அல்லது குறைந்த சராசரியாக ரூ.30,400 ஆக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆய்வாளர் பிரதமேஷ் மலையா கூறுகையில், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதைப் பார்க்கிறேன். இதனால், தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் வரலாம். தீபாவளிப்பண்டிகைக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.31,500 முதல் ரூ.34 ஆயிரம் வரை உயரலாம். சராசரியாக ரூ.30 ஆயிரத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சர்வதேச அரசியல்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றில் சாதகமான போக்கு தென்பட்டால், இதில் மாற்றங்கள் நிகழலாம் எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x