Published : 10 Jun 2018 09:14 AM
Last Updated : 10 Jun 2018 09:14 AM

`பிரின்டர்களுக்கான தேவை குறையாது’

தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் பிரின்டர்களுக்கான தேவை குறையாது என ஜெராக்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் பாலாஜி ராஜகோபாலன் கூறினார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரின்ட் எக்ஸ்போ தொடங்கியது. இதில் கலந்து கொள்ள சென்னை வந்தவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது. முன்பெல்லாம் ஒரு இடத்தில் அச்சிடப்பட்டு தகவல் விநியோகம் செய்யப்பட்டது. இப்போது தகவல் எலெக்ட்ரானிக் முறையில் விநியோகம் செய்யப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் அச்சடிக்கப்படுகிறது.

அடுத்ததாக ஓட்டல்களில், மெனு கார்டுகளை ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். குறைவாக அச்சடிக்க வேண்டும் என்பதை நாங்களும் ஊக்குவித்து வருகிறோம். ஆனாலும் அச்சுக்கான தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இரட்டை இலக்க வளர்ச்சி

அதேபோல புத்தகத் துறையை எடுத்தாலும், முன்பெல்லால் புத்தகத்தை அச்சடித்து விற்பனைக் காக காத்திருப்பார்கள். இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு அச்சுக்கு செல்கிறது. இது போல பல துறை களில் தேவைக்கு ஏற்ற வகையில் அச்சடித்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. டிஜிட்டல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. அதனால் அச்சடிப்பது இப்போதைக்கு நிற்கப்போவதில்லை.

மாறாக சில சமயங்களில் அச்சடிப்பது அதிகரித்திருக்கிறது என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம், முன்பெல்லாம் ஒவ் வொரு அலுவலங்களில் பைல்களுக்கு என பிரத்யேக இடம் இருக்கும். ஆனால் இப்போது ஃபைல் வைக்க இடம் இல்லாததால் தேவைப்படும் தகவல்களை ஒவ்வொரு முறை அச்சடிப்பது அதிகரித்து வருகிறது. அதேபோல கலர் பிரிண்டர்களுக்கான தேவையும் உயர்ந்து வருகிறது. எத்தனை சதவீதம் வளர்ச்சி என்பதை சொல்ல முடியாது. ஆனால் ஆண்டுக்காண்டு இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வருகிறோம்.

மெஷின் இறக்குமதி

எங்களிடத்தில் 7,000 ரூபாய் முதல் 30 கோடி ரூபாய் வரை கூட மெஷின்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் எங்களுக்கு என ஆலை இல்லை. நாங்கள் சர்வதேச நிறுவனமாக இருப்பதால் தேவைப்படும் இடங்களில் இருந்து மெஷின்களை இறக்குமதி செய்துகொள்வோம். எங்களிடம் பல வகையான மெஷின் கள் உள்ளன. ஒவ்வொன்றில் பல வடிவங்கள் இருக்கின்றன. அதனால் ஒருங்கிணைந்த ஆலையை இங்கு அமைப்பது இப்போதைக்கு தேவையில்லாதது.

உதாரணத்துக்கு ஏ4 காகிதங்களை அச்சிடுவதற்கு ஏற்ற மெஷின்கள் பிரிவில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இது போல ஏதேனும் ஒரு பிரிவில் அதிக தேவை இருக்கும் பட்சத்தில் இங்கே ஆலை தொடங்கும் திட்டமும் இருக்கிறது என பாலாஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x