Published : 10 Jun 2018 09:13 AM
Last Updated : 10 Jun 2018 09:13 AM

2 வீடு வைத்திருப்பவர்களுக்கு வரி சலுகை: வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வைத்திருக்கும் வரிதாரர்களுக்கு தனக்கு சொந்தமான வீடுகளில் எந்த வீட்டில் தான் வசிக்கிறேன், எந்த வீட்டுக்கு ஆண்டு மதிப்பு எதுவும் கிடையாது என்பதை எந்த நேரத்திலும் மாற்றும் உரிமை இருப்பதாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (ஐடிஏடி) மும்பை அமர்வு தெரிவித்துள்ளது. இந்த வீட்டிற்கு அசல் வாடகை (notional rent) அடிப்படையில் எந்த வரியும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வருமான வரி தாக்கலின்போது ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வைத்திருப்பவர்கள் தனக்கு சொந்தமான வீடுகளில் ஏதேனும் ஒன்றை, தற்போது வசித்து வரும் வீடாக குறிப்பிடவேண்டும். இந்த வீட்டுக்கு ஆண்டு மதிப்பு எதுவும் கிடையாது. வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மும்பை அமர்வின் இந்த உத்தரவின் மூலம் எந்த வீட்டை தான் வசித்துவரும் வீடாக வரிதாரர் வருமான வரித் தாக்கலின்போது குறிப்பிட்டிருந்தாரோ அதை வருமான வரி ஆய்வின்போது வேறு வீடாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு வரி செலுத்துவதை தவிர்க்க முடியும்.

தனக்கு சொந்தமான பிற வீடுகளை வீட்டு உரிமையாளர் வாடகைக்கு விடவில்லை என்றாலும்கூட அவை வாடகைக்கு விடப்பட்டதாக கருதப்பட்டு அசல் வாடகையின் (notional rent) அடிப்படையில் அந்த வீடுகளுக்கான வரி வசூலிக்கப்படும். நகராட்சிகளுக்கு செலுத்தும் வீட்டு வரிக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதுதவிர மேலும் 30 சதவீத வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

மும்பையின் ஜுஹூ, சாண்டாகுரூஸ் கிழக்கு மற்றும் வசாய் பகுதிகளில் தலா ஒவ்வொன்றாக 3 வீடுகளை வைத்திருக்கும் வெங்கடவர்த்தன் என் ஐயங்கார், தனது வருமான வரி தாக்கல் படிவத்தில் வசாயிலுள்ள வீட்டை தான் வசிக்கும் வீடாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் வருமான வரி ஆய்வின்போது ஜுஹூ பகுதியில் தான் வசிப்பதாக மாற்றிக் குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்த நிலையில், இந்தப் பிரச்சினை ஐடிஏடி விசாரணைக்கு வந்தது. வருமான வரி தாக்கலின்போது தான் வசித்துவருவதாக குறிப்பிட்ட வீட்டிற்கு பதிலாக, வருமான வரி ஆய்வின்போது வேறொரு வீட்டைக் குறிப்பிடுவதை வருமான வரி சட்டம் தடுக்கவில்லை என்பதற்கான விவரங்களை ஐடிஏடியில் வெங்கடவர்த்தன் சமர்ப்பித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஐடிஏடி, வருமான வரித் தாக்கலில் வசிக்கும் வீடாக குறிப்பிட்டதை பிறகு மாற்ற முடியாது என வரிச் சட்டத்தின் எந்தப் பகுதியிலும் கூறப்படவில்லை என தனது உத்தரவில் தெரிவித்து ள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x