Published : 01 Jun 2018 07:32 PM
Last Updated : 01 Jun 2018 07:32 PM

அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதிய சுற்றுச்சூழல் விதிகள்: மின் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான சுற்றுச்சூழல் புதிய விதிமுறைகளுக்கான செலவினங்களினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் சுற்றுச்சூழலுக்கான புதிய விதிமுறைகளின் செலவினங்களும் மக்கள் தலையில் வந்து விடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் மத்திய மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்துக்கு எழுதியுள்ள அறிவிக்கையில் திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்துவதன் மீதான செலவுகளை நுகர்வோரிடம் இருந்து பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங் மாநிலங்களவையில் தெரிவிக்கும் போது, ஏற்கெனவே உள்ள அனல் மின் நிலையங்களில் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப கருவிகளைப் பொருத்துவதால் மின்சாரக் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 62-93 பைசாக்கள் வரை உயரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள நிலக்கரி தொடர்புடைய சுமார் 295 அனல் மின் நிலையங்கள் புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்த 2-4 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. டிசம்பர் 2017-லேயே அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டிய புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு தற்போது 2022 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய எரிசக்தி கூட்டமைப்பின் நவம்பர் 2017 அறிவிப்பின்படி ஏற்கெனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த மெகாவாட்டுக்கு ரூ.1-2 கோடி வரை செலவாகும், புதிய நிலக்கரி தொடர்புடைய அனல் மின் நிலையங்களில் இதனை அமல்படுத்த ரூ.5 கோடி வரை செலவாகும்.

சல்பர் டையாக்சைடை அகற்ற பொருத்தப்படும் கருவிகளுக்கு ஆகும் செலவுகள்தான் இப்போது பேசப்பட்டு வருகிறது. அதே போல் திறந்த சுழற்சி முறையிலிருந்து மூடிய சுழற்சி முறைக்கு மாற்றுவதும் செலவிழுக்கும் திட்டங்களாகும்.

ஆகவே இந்தச் செலவுகளை மின்கட்டணங்கள் மூலம்தான் ஈடுகட்ட முடியும் என்று மின்சார அமைச்சக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மின் கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளூ கேஸிலிருந்து கார்பன் டை ஆக்சைடை அகற்றும் முறை பெரிய அளவில் செலவு பிடிக்கும் ஒரு விவகாரம் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x