Published : 01 Jun 2018 08:53 AM
Last Updated : 01 Jun 2018 08:53 AM

மார்ச் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 7.7%

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது. கடந்த ஏழு காலாண்டுகளில் இதுவே மிகப்பெரிய வளர்ச்சி ஆகும். இந்த நிலையில் உலகின் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடத்தில் இருக்கிறது. மார்ச் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாகும்.

ஆனால் ராய்ட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சராசரியாக 7.3 சதவீத அளவுக்கு மட்டுமே வளர்ச்சி இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் முறையே 5.6 சதவீதம், 6.3 சதவீதம் மற்றும் 7 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைந்திருந்தது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் (2017-2018) இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் (2016-17) வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தித் துறையில் 9.1 சதவீத வளர்ச்சி இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் 6.1 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது. உற்பத்தித் துறை வளர்ச்சி ஒட்டு மொத்த ஜிடிபியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர விவசாயத் துறையில் 4.5 சதவீதம் மற்றும் கட்டுமானத் துறையில் 11.5 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜிஎஸ்டி வரி முறையில் இருந்த ஆரம்ப கால சிக்கல்களில் இருந்து நாம் மீண்டு வந்துவிட்டதாக ஹெச்டிஎப்சி வங்கியின் மூத்த பொருளாதார வல்லுநரான துஷார் அரோரா கூறினார். வளர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கக்கூடிய சூழலில், வட்டி விகிதம் உயர்வதற்கான சூழலும் அதிகரித்திருக்கிறது. அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட இருக்கிறது. ராய்ட்டர்ஸ் கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பொருளாதார வல்லுநர்களில் 40 சதவீதத்தினர் வட்டி விகிதம் உயர்வினை எதிர்பார்க்கின்றனர்.

2017-18-ம் நிதி ஆண்டின் தனிநபர் வருமானம் ரூ.86,668 ஆக உயர்ந்திருக்கிறது. முந்தைய 2016-17-ம் நிதி ஆண்டின் தனிநபர் வருமானம் ரூ.82,229 ஆக இருந்தது.

பங்குச் சந்தை உயர்வு

ஜிடிபி குறித்த தகவல்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இருந்தாலும் வளர்ச்சி விகிதம் நன்றாக இருக்கும் என்னும் கணிப்பு காரணமாக பங்குச்சந்தையில் நேற்று ஏற்றம் இருந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தாலும் முடிவில் 416 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது.

எனர்ஜி, எப்எம்சிஜி, நிதி, ஐடி உள்ளிட்ட துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன. ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய இரு பங்குகள் அதிகம் உயர்ந்ததும் சென்செக்ஸ் ஏற்றத்துக்கு ஒரு காரணமாகும்.

நிதிப்பற்றாக்குறை 3.5%

கடந்த நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 3.5 சதவீதமாக இருக்கிறது. நிதிப் பற்றாக்குறைக்கு இலக்காக ரூ.5.94 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.

நிதி ஆண்டு முடிவில் ரூ.5.91 லட்சம் கோடியாக நிதிப்பற்றாக்குறை இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கு பாதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x