Published : 04 May 2018 08:03 AM
Last Updated : 04 May 2018 08:03 AM

ஆதார் திட்டத்தால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படவில்லை: மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருத்து

இந்தியாவின் ஆதார் தொழில்நுட்பம் தனிநபர் சுதந்திரத்துக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தவில்லை என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை மற்ற நாடுகளுக்கும் கொண்டுசெல்வதற்கு பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழியாக உலக வங்கிக்கு உதவுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆதார் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நந்தன் நிலகேணி ஆதாரை உலக நாடுகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக உலக வங்கிக்கு ஆலோசனைகளும், உதவிகளும் வழங்குவார் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தவேண்டிய அளவுக்கு முக்கியமான திட்டம் ஆதார். இதன்மூலம் கிடைக்கும் பலன்கள் மிகவும் அதிகம். ஆட்சிமுறையின் தரம் உயர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் ஆற்றலும் மேம்படும். இதற்கு ஆதார் உதவும். ஆதார் திட்டத்தை மற்ற நாடுகளுக்கும் எடுத்துச்செல்ல உலக வங்கிக்கு நாங்கள் நிதியுதவி செய்வோம்.

ஆதார் என்பது பயோமெட்ரிக் முறையிலான சரிபார்ப்புத் திட்டம் மட்டுமே, இதனால் தனிநபர் சுதந்திரத்துக்கு சிக்கல் எதுவும் ஏற்படாது. எந்த மாதிரியான தகவல்கள் சேமிக்கப்படுகின்றன, யார் அந்தத் தகவல்களை அணுகுகிறார்கள் போன்ற விஷயங்களை கவனிக்கவேண்டியது அவசியம். இவை சரியாக கையாளப்படுகின்றனவா என்றும் பார்க்கவேண்டும். வங்கிக் கணக்குகளில் இவை சரியாக கையாளப்படுகின்றன என்று நினைக்கிறேன்.

நந்தன் நிலகேணி என்னுடைய நண்பர் மற்றும் நான் வியக்கக்கூடிய ஒருவர். அவர் ஆதாரை மற்ற நாடுகளும் செயல்படுத்த உதவுவார். டிஜிட்டல் முறைக்கு மாறும் திட்டங்கள் கல்வி மற்றும் ஆட்சி முறை முன்னேற்றத்துக்கு உதவும் என பில் கேட்ஸ் கூறினார்.

தற்போதைய பாரதிய ஜனதா ஆட்சிக்கு முன்பாகவே ஆதார் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் நரேந்திர மோடி அதனை கைவிடாமல் செயல்படுத்தியது அவரது சிறப்பைக் காட்டுவதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.

முன்னதாக 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் ‘மாற்றத்துக்கான தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய பில் கேட்ஸ், ஆதார் என்பது இதுவரை எந்த நாட்டின் அரசும் செய்யாத திட்டம், உலகின் பணக்கார நாடுகளேகூட செய்யாத திட்டம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது வருவாயின் பெரும்பகுதியை சமூக நலனுக்கு செலவழிக்கும் பொருட்டு பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பை பில் கேட்ஸ் நடத்திவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x