Published : 09 Apr 2018 08:39 AM
Last Updated : 09 Apr 2018 08:39 AM

ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவின் அரசுப் பிரதிநிதி மாற்றம்

ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவில் அரசின் சார்பாக நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினர் அமித் அகர்வால் மாற்றப்பட்டு அவரது இடத்தில் லோக் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் நிதிச் சேவைகள் துறையின் இணைச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 5 முதல் இவரது நியமனம் அமலுக்கு வந்ததாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இயல்பான நடவடிக்கை

ஐசிஐசிஐ வங்கி, வீடியோ கான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் கொடுத்ததில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கை ஐசிஐசிஐ வங்கிமீது எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக எடுக்கப்படவில்லை, இது இயல்பாக நடைபெறும் ஒன்றுதான் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக நிதி அமைச்சகத்தின் இணைச் செயலர் தரத்தில் உள்ள ஒருவர்தான் வங்கி இயக்குநர் குழுவில் அரசு சார்பான பிரதிநிதியாக நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட விசாரணை

இந்த விவகாரத்தில் மத்திய குற்ற புலனாய்வு அமைப்பான சிபிஐ, ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரிடம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் பெயரும் சிபிஐ முதற்கட்ட விசாரணையில் இடம்பெற்றுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் இயக்கு நர் குழு, சாந்தா கொச்சார் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது. நியூபவர் நிறுவனத்தைத் தான் எப்பொழுது தொடங்கினேன் என்பது சாந்தா கொச்சாருக்கு தெரியாது என தீபக் கொச்சார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x