Published : 09 Apr 2018 08:36 AM
Last Updated : 09 Apr 2018 08:36 AM

2017-ம் ஆண்டில் இரு சக்கர வாகன கடன் 32% அதிகரிப்பு: வாராக்கடனில் குஜராத்துக்கு முதலிடம்

இரு சக்கர வாகனங்களுக்காக கடன் வாங்குவது 2017-ம் ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கியல்லாத பிற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இரு சக்கர வாகன கடன் வழங்குவதில் முன்னணி யில் உள்ளன. இரு சக்கர வாகனங்களை வாங்குவற்காக கடன் வாங்கி அதனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை யில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிஆர்ஐஎஃப் ஹை மார்க் தகவல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கல்பனா பாண்டே, ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கொடுக்கும் ஊக்கத்தின் காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடன் வளர்ச்சி மிக வேகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் 2017-18 நிதியாண்டின் டிசம்பர் வரையிலான 9 மாதத்தில் மட்டும் 35 சதவீதம் இரு சக்கர வாகன கடன் வளர்ச்சி இருந்ததாக தெரிவித்தார்.

2017-ம் ஆண்டு இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.39,100 கோடி. இவற்றில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) 37 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.

மொத்த சந்தைப் பங்கில் 67 சதவீதத்தை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இரு ஆண்டுகளுக்கு முன்பு இது 60 சதவீதமாக இருந்தது. தனியார் வங்கிகள் இருசக்கர வாகன கடனில் 30 சதவீத சந்தையை வைத்துள்ளன.

அதிகபட்சமாக கடன் வழங்கியதில் மஹாராஷ்டிரா மாநிலம் ரூ.579 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. வாராக்கடன்களைப் பொறுத்தவரையில் குஜராத் மாநிலத்தில் 90 முதல் 180 நாட்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தாதவர்கள் 3 சதவீதம் பேர். இதற்கு அடுத்த இடத்தில் மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

சராசரி கடன் ரூ.48,000

தனிப்பட்ட நகரங்களின் வாராக்கடன்களைப் பொறுத்தவரை மஹாராஷ்டிராவின் தானே (4.46 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் குஜராத்தின் அஹமதாபாத் (3.84 சதவீதம்) மற்றும் சூரத் (3.61 சதவீதம்) நகரங்கள் உள்ளன. ஒட்டுமொத்த இரு சக்கர வாராக்கடன் 2.02 சதவீதமாக உள்ளது.

2017-18 நிதியாண்டின் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 50 லட்சம் வாகனங்களுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிக விலையுள்ள வாகனங்களை வாங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனத்துக்கான சராசரி கடன் ரூ.48,000 ஆக உள்ளது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x