Published : 06 Apr 2018 08:42 AM
Last Updated : 06 Apr 2018 08:42 AM

தவறுக்கு பொறுப்பேற்கிறேன், மற்றொரு வாய்ப்பு தாருங்கள்: மார்க் ஜூகர்பெர்க் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல்கள் மூன்றாம் நபருக்கு அளிக்கப்பட்ட விவகாரத்தில் தவறு நடைபெற்றிருக்கலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் முறையற்ற வகையில் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களைத் திரட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 8.7கோடி மக்களின் தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டிருக்கலாம் என ஒப்புக் கொண்டுள்ளது.

இதில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜூகர்பெர்க், நிறுவனத்தை நடத்த மற்றொரு வாய்ப்புக் கொடுங்கள், இது மிகப் பெரிய தவறு, என்னுடைய தவறு என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைத் திரட்டி மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நம்பகத்தன்மை காரணமாக பலர் வெளியேறி வருகின்றனர்.

இது என்னுடைய முதல் தவறு என்று குறிப்பிட்ட மார்க், மேலும் இந்த தகவல் திருட்டு நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்குத் தெரியாது. இந்த விவகாரம் வெளியான பின்னர் பதவியிலிருந்து விலகவும் இயக்குநர் குழு கேட்டுக் கொண்டது என்று கூறியுள்ளார். தான் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது.

இதனால் மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது. இதற்கு தான் மட்டுமே பொறுப்பு. கேம்பிரிஜ் அனலிட்டிகா போன்ற சிக்கல்கள் இனிமேல் தொடராது. இதற்கான வேலைகளை செய்து வருகிறோம். எனினும், இது முழுமையாக தனது பொறுப்புதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

``நான் இங்குதான் தொடங்கினேன், இங்குதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கு என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பு,’’ என்றார். இந்த மோசடி விவகாரத்தினால் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் கூறினார்.

``இந்த தகவல்கள் சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நம்பவில்லை என்று குறிப்பிட்ட மார்க், ஆனால் நடந்த சம்பவம் சரியானது அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நம்பிக்கையை காப்பற்றும் விதமாக இதை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்’’ என்றார். ஃபேஸ்புக் விளம்பரதாரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவோம். ஆனால் அவர்கள் அதிநவீனமாக வருகிறார்கள். விரைவில் இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமெரிக்க செனட் சபை முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உள்ளது. கமிட்டியில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜூகர்பெர்க் தயாராக இருக்கிறார். எங்களது அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிப்பார் என நம்புகிறோம் என கமிட்டியின் தலைவர் ஜார்ஜ் வால்டன் மற்றும் குழுவின் உறுப்பினர் பிரான்ங்க் பாலோன் கூறினர்.

இதற்கிடையில் 5.62 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு முறையற்ற வகையில் பகிரப்பட்டிருக்கலாம் என்பதை ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 5,62,455 பேரின் தனிப்பட்ட தகவல்கள் ஃபேஸ்புக் வாயிலாக அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டிருக்க வாய்ப்புள்ளது, எனினும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என பேஸ்புக் நிறுவனத்தின் உயரதிகாரி மைக் ஷ்ரோப்பர் கூறியுள்ளார்.

இந்திய தேர்தலில் அனலிட்டிகா நிறுவனம் தலையிட்டதாகவும், காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியதாகவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம்சாட்டி இருந்தார். ஃபேஸ்புக் வழியாக இந்தியர்களின் தகவல்கள் அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டது குறித்து அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x