Published : 20 Mar 2018 09:06 AM
Last Updated : 20 Mar 2018 09:06 AM

ஆன்லைன் ராஜா 19: கும்பிடப்போன தெய்வம்…….

சீ

ன அரசின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் (Ministry of Foreign Trade), இன்ஃபோஷேர் (Infoshare) என்னும் பெயரில், இ- காமர்ஸ் பிரிவு தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்குத் தலைமை நிர்வாகி தேவை. நாட்டிலேயே, இந்தத் துறையில் அனுபவமும், நல்ல ஆங்கில அறிவும் கொண்டவர் ஜாக் மா மட்டும்தான். வெற்றிலை, பாக்கு வைத்து வரவேற்காத குறையாக அழைத்தார்கள். ஏற்றார்.

அரசு வேலைக்குச் சேரும்போது, சொந்த பிசினஸில் நேரம் செலவிடக்கூடாது என்பது சட்டம். மொழிபெயர்ப்பு கம்பெனியில் ஒவ்வொரு வாரமும் சில மணி நேரங்கள் செலவிட்டு வந்தார். அரசுக்குத் தெரியாமல் இதைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர் மனசாட்சி சம்மதிக்கவில்லை. ஒரு நண்பரிடம் ஒப்படைத்தார். வரும்போது, நோட்டீஸ் போர்டில் கொட்டை எழுத்துகளில் தன் கை வண்ணம் காட்டினார். அவர் எழுதிய வாசகம்- Never Give Up. (முயற்சியைக் கைவிடாதீர்கள்.) கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நண்பருக்குத் தந்த அறிவுரையோ, அல்லது தனக்குத் தானே சொல்லிக்கொண்ட தன்னம்பிக்கை வார்த்தைகளோ?

(ஜாக் மாவின் மொழிபெயர்ப்பு கம்பெனி இன்றும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.)

இன்ஃபோஷேர் கம்பெனியின் ஜெனரல் மேனேஜராக ஜாக் மா சேர்ந்தார். ``அரசின் பலம் இருக்கிறது. நாடு வளர இன்டர்நெட் மாபெரும் சக்தி என்று நிரூபிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு.” மனம் நிறைய உற்சாகம். சீனா யெல்லோ பேஜஸ் கம்பெனியிலிருந்து எட்டு பழைய சகாக்களைத் தன் அணியில் சேர்த்துக்கொண்டார்.

முதல் வேலை - அணியில் அனைவருக்கும் கறுப்பு நிற டி-ஷர்ட். அதில் இருந்த வாக்கியம், “He who has not climbed the Great Wall is not a real man.” (சீனப் பெருஞ்சுவரில் ஏறாத யாரும் உண்மையான ஆண் மகனல்ல). உங்கள் இலக்குகளை எட்டவே முடியாத உயரத்தில் வையுங்கள் என்பது இதன் மூலம் ஜா மா சொன்ன சேதி.

அபாரமான தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்கள், அர்ப்பணிப்போடும், உழைக்கும் வெறியோடும் சகாக்கள். ஒரே வருடத்தில் தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களும் தொடர்புகொள்ள உதவும் www.chinamarket.com.cn இணையதளம் உருவானது. இந்த முயற்சியை, “சீனாவின் நிரந்தர ஏற்றுமதிக் கண்காட்சி” என்று அமைச்சரே புகழ்மாலை சூட்டினார். சீனாவின் தலை சிறந்த இணையதளமாக அரசாங்கம் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது.

இந்தக் காலகட்டத்தில், இன்டர்நெட் உலகில் மாபெரும் மாற்றங்கள். 1994. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஜெர்ரி யாங் (Jerry Yang), டேவிட் ஃபிலோ (David Filo) எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் டாக்டர் படிப்பு மாணவர்கள். இருவருக்கும் கம்ப்யூட்டரில் எக்கச்செக்க ஈடுபாடு, சொந்தத் தொழில் தொடங்கும் ஆசை. என்ன செய்யலாம் என்று மனங்களில் கேள்விகள். பல்வேறு துறைகளை ஆராய்ந்தார்கள். அதிவேகத்தில் வளர்ந்துகொண்டிருந்த துறை - இணையதளங்கள். 1992 - இல் 10 இணையதளங்களே இருந்தன; 1993 - இல் 130.

ஆகவே, இணையதளம் தொடர்பான பிசினஸ்தான் தொடங்கவேண்டும் என்று அவர்கள் மனக்குறளி அடித்துச் சொன்னது. ஜெர்ரி யாங், டேவிட் ஃபிலோ இருவரும் மாத்தி யோசிப்பவர்கள். ஆட்டுமந்தைக் கூட்டம் போல் எல்லோரும் பயணிக்கும் பாதையில் போகக்கூடாது. நம் வழி தனிவழி. எது அந்தப் புதிய பாதை? இணையதளங்களின் எண்ணிக்கை பெருகும்போது, தங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவோர் திணறுவார்கள் என்று இருவரின் தொலைநோக்குப் பார்வையும் சொன்னது. அவர்களுக்காக ஒரு இணையதளக் கையேடு தயாரித்தால்……..

ஜனவரி 1994. பிறந்தது, Jerry and David's Guide to the World Wide Web. கம்பெனிப் பெயர், தயாரிப்புப் பொருட்கள் பெயர் ஆகியவை சுருக்கமானவையாக, உச்சரிக்கச் சுலபமானவையாக இருக்கவேண்டும் என்பது மார்க்கெட்டிங்கின் அடிப்படைக் கொள்கை. ஆகவே, இரண்டே மாதங்களில் கம்பெனிப் பெயரை Yahoo! என்று மாற்றினார்கள். Yet Another Hierarchical Officious Oracle என்பதன் சுருக்கம். என்ன அர்த்தம்? கூகுள் மொழிபெயர்ப்பு சொல்கிறது, “இன்னொரு உயர்மட்ட அதிகாரபூர்வமான ஆரக்கிள்.” ஆங்கில வாக்கியமே இதைவிடப் புரிகிறதே என்கிறீர்களா? சொற்களைப் பிரித்துப் பார்க்கலாம்.

Yet Another - இன்னும் ஒரு

Hierarchical - கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில், தகவல்களைச் சேகரிக்கும்போது, தகவல்களின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முறை.

Officious - அதிகாரபூர்வமான

Oracle - உண்மைகளின் உறைவிடம்.

தலை சுற்றுகிறதா?

ஜெர்ரி யாங், டேவிட் ஃபிலோ இருவரும் மகா புத்திசாலிகள். யாஹூ, இப்படி வாயில் நுழையாத, நம்மைப் போன்றவர்களுக்குப் புரியாத நீ……..ள…..ப் பெயரின் சுருக்கம் என்று சொல்லவேயில்லை. இன்னொரு பெயர்க் காரணம் சொன்னார்கள். கல்லிவரின் பயணங்கள் (Gulliver’s Travels) என்னும் உலகப் புகழ்பெற்ற நாவல், ஜோனத்தான் ஸ்விஃப்ட் (Jonathan Swift) என்னும் அயர்லாந்து நாட்டு எழுத்தாளரின் 1726 - ஆம் ஆண்டுப் படைப்பு. பல நாடுகளுக்குப் பயணம் செய்யும் கல்லிவர், ஹொயானம்ஸ் (Houyhnhnms) என்னும் இனத்தவரைச் சந்திக்கிறார். மனிதர்கள் போல் தோற்றம் கொண்ட இவர்கள், அருவெருப்பானவர்கள், கரடுமுரடானவர்கள், பண்பாடற்றவர்கள். ``கல்லிவர் பயணங்கள் புத்தகத்தில் வரும் யாஹூவைப்போல் எங்கள் இணையதளக் கையேடும் கரடுமுரடானது. அதுதான் இந்தப் பெயர்” என்று தங்களையே கேலி செய்துகொண்டார்கள். அதுசரி, பெயரில் ஏன் ! என்னும் ஆச்சரியக் குறி? காப்புரிமைக் காரணங்களுக்காக ! சேர்க்கவேண்டி வந்தது.

``அப்பம் தின்னவா, குழியை எண்ணவா?” என்று நம் ஊரில் பழமொழி உண்டு. யாஹூ என்னும் பெயரின் அர்த்தம் என்னவாக இருந்தாலென்ன, தேடுபொறி பயனுள்ளதாக இருந்தது. ஒரே வருடம். முதல் வருட முடிவில் யாஹூவில் 10 லட்சம் ``கிளிக்”கள். தங்களிடம் இருப்பது தங்கச் சுரங்கம் என்று ஜெர்ரி யாங், டேவிட் ஃபிலோ உணர்ந்தார்கள். ஏப்ரல் 1996. யாஹூ பங்குகள் சந்தையில் தொடக்க விற்பனை. (ஐபிஓ) இரண்டு மாணவ திலகங்கள் சொத்தும் ஆயிரம் கோடி. உலகத் தொழில் முனைவர்களுக்கு யாஹூ துருவ நட்சத்திரம், ஜெர்ரி யாங், டேவிட் ஃபிலோ இருவரும் சூப்பர்மேன்கள்.

ஜெர்ரி யாங் தைவானில் பிறந்தவர். இரண்டாம் வயதில் தந்தையை இழந்தார். குடும்பத்தில் வறுமை. தைவானின் பொருளாதாரமும் மந்த நிலையில் இருந்தது. பத்து வயது ஜெர்ரி, அவன் தம்பி எட்டு வயது கென் (Ken) ஆகியோரின் எதிர்காலம் இருண்டுவிடும் என்று அம்மா பயந்தார். குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறினார். அங்கே போய்த்தான் ஜெர்ரி ஆங்கிலமே எழுதப் படிக்கக் கற்றார். அறிவுக் கூர்மையால், உலகப் புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் டாக்டர் படிப்பில் சேர்ந்தார். யாஹூ தொடங்கினார். இருபத்து ஒன்பதே வயதில் ஆயிரம் கோடிக்கு அதிபதி.

சீனாவுக்கும், தைவானுக்கும் அரசியல் விரோதங்கள் இருந்தாலும், இரு நாட்டு மக்களுக்கும், ``நாம் அனைவரும் சீனச் சகோதரர்கள்” என்னும் உள்ளுணர்வு எப்போதும் உண்டு. ஏழைச் சிறுவன், குடும்பப் பின்புலம் எதுவும் இல்லாதவன், திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து உலக அரங்கில் வெற்றிக்கொடி நாட்டியதில் அத்தனை சீனர்களுக்கும் தாங்களே ஜெயித்ததுபோல் பூரிப்பு. சீனத் தொழில்முனைவோர்களுக்கு அவர் கடவுள். இன்னொரு ஜெர்ரி யாங் ஆகவேண்டும் என்று பல இதயங்களில் வேகத் துடிப்பு. ஜாக் மாவுக்கும் தான். இன்னொரு ஆசை, ஜெர்ரி யாங்கைச் சந்திக்கவேண்டும்.

மனமார விரும்பினால் அது நடக்குமே? ஜெர்ரி யாங் சீனாவில் யாஹூ கம்பெனி தொடங்க விரும்பினார். சீனப் பயணத்துக்குத் திட்டமிட்டார். அவர் தலை அசைத்தால், ஏராளமான முதலீடு, ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகள் வரும் வாய்ப்பு. விஐபி வரவேற்பு தர அரசு முடிவெடுத்தது. யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது? அரசாங்க அதிகாரியாக இருக்கவேண்டும், சீனமும், ஆங்கிலமும் சரளமாகப் பேசவேண்டும், இன்டர்நெட் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். வேறு யார்? உயர் அதிகாரிகள் சொன்னார்கள், “ஜாக் மா யூ ஆர் செலக்டட்.”

ஜாக் மாவுக்கு அப்போது தெரியாது, இணையதளச் சக்கரவர்த்தியின் சந்திப்பு தன் வாழ்க்கையை எப்படி எப்படியோ மாற்றப்போகிறது என்று.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x