Published : 20 Mar 2018 09:04 AM
Last Updated : 20 Mar 2018 09:04 AM

ரூ.4 ஆயிரம் கோடி வங்கி மோசடி: மும்பை நிறுவன இயக்குநர்கள் 3 பேர் கைது

வங்கிகளில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குநர்கள் 3 பேரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களான பவார்லால் பண்டாரி, பிரமல் கோரகாந்தி, கம்லேஷ் கனோ ன்கோ ஆகிய மூவரும் நிதி மோசடி, ஏமாற்றுதல், நம்பகத் தன்மையை குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 250 கோடி மோசடி செய்ததாக ஆக்ஸிஸ் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி இந்நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளித்திருந்தது. கைது செய்யப்பட்டுள்ள மூவரும் கடன் உறுதியளிப்பு கடிதத்தின் அடிப்படையில் போலியாக ரசீதுகள் தயாரித்து ஆக்ஸிஸ் வங்கி கிளையில் மோசடி செய்துள்ளனர். இதற்கு வங்கி பணியாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் என்று காவல்துறை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அமிதாப் பரேக் (2013-ல் இறந்துவிட்டார்), ராஜேந்திர கோதி, தேவன்ஷு தேசாய், கிரண் பாரிக், விக்ரம் மோர்தானி மீது புகார் அளித்திருந்தது. இந்த நிறுவனத்தின் மீது ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு என்று வாங்கிய கடன் தொகையை ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு திருப்பி விட்டுள்ளனர். மேலும் பரேக் மற்றும் சிலர் வங்கி கடனை தங்களது சொந்த சேமிப்புக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இந்த நிறுவனம் அளித்த போக்குவரத்து ரசீதுகளில் குறிப்பிட்டுள்ள லாரிகளின் எண்கள் அனைத்தும் இரு சக்கர வாகன எண்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இம்மூவரும் வங்கிக்கு மிகப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி புகாரில் கூறியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x