Published : 20 Mar 2018 09:02 AM
Last Updated : 20 Mar 2018 09:02 AM

குழப்பமான சரக்கு மற்றும் சேவை வரி: அதிக வரி விதிக்கப்படும் நாடு இந்தியா- உலக வங்கி ஆய்வு அறிக்கை வெளியீடு

இந்தியாவின் ஜிஎஸ்டி விகிதம் அதிக குழப்பங்களைக் கொண்டுள்ளது. உலக அளவில் அதிக வரிவிகிதம் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்றும் உலக வங்கி கூறியுள்ளது. உலக அளவில் 115 நாடுகளின் வரி விதிப்புடன் ஒப்பிடுகையில் மறைமுக வரி விதிப்பு முறைகளில் இந்தியாவின் ஜிஎஸ்டி அதிக குழப்பங்களுடன், அதிக வரி விகிதமும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. உலக வங்கியின் அரையாண்டு மேம்பாடுகள் குறித்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது ,

இந்தியாவின் ஜிஎஸ்டி 5 வரி விகிதங்களாக உள்ளது. குறிப்பாக 0, 5%, 12%,18% மற்றும் 28 % விதிக்கப்படுகிறது. தவிர பல பொருட்களின் விற்பனைக்கு வரி விலக்கு அல்லது வரி இல்லாமல் ஏற்றுமதி செய்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தும் ஏற்றுமதியாளர்கள் தங்களது வரியை திரும்ப கிளைம் செய்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தங்கத்தின் மீது தனியாக 3% வரியும், வைர கற்களுக்கான வரி 0.25 சதவீதமும் உள்ளது. மேலும் மதுபானங்கள், பெட்ரோலியம் பொருட்கள், ரியல் எஸ்டேட் துறையில் முத்திரைத்தாள் கட்டணங்கள், மின்சாரத்திற்கான வரி போன்றவை ஜிஎஸ்டி சட்டத்துக்குள் கொண்டுவரப்படாமல் உள்ளன. இவற்றுக்கான வரி விதிப்பு அதிகாரம் மாநில அரசுகளிடம் உள்ளதுடன் ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொரு வகையில் வரி விதிப்பை மேற்கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் 49 நாடுகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரே வரி விகிதம் உள்ளது. 28 நாடுகளில் இரண்டு வரி விகிதம் உள்ளது. இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் மட்டுமே நான்கு வரி விதிப்பு மற்றும் ஜீரோ வரி விகிதம் உள்ளது. இத்தாலி, லக்ஸம்பர்க், பாகிஸ்தான் மற்றும் கானா நாடுகளில் நான்கிற்கும் மேற்பட்ட வரி விகிதம் உள்ளது. இவற்றில் இந்தியாவில் மட்டும்தான் பல்வேறு வரி விகிதங்களில் அதிக வரி உள்ளது.

ஜிஎஸ்டி-யை முறைப்படுத்தும் விதமாக 12 % மற்றும் 18 % வரிகளை இணைத்து ஒரு வரி விகிதமாக்கும் வாய்ப்பு உள்ளது என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். கடந்த முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத வரி விதிப்பில் இருந்த 228 பொருட்களை 50 பொருட்களாக குறைத்த னர்.

தொடக்கத்தில் மாநில அரசுகளுடன் இணைந்து ஜிஎஸ்டி-யை செயல்படுத்தியதில் பல குழப்பங்கள் இருந்தன. உள்ளூர் வரிகளை நிறுத்துவது குறித்து தெளிவற்ற நிலை இருந்தது. தமிழ்நாடு அரசு கேளிக்கை வரியை, ஜிஎஸ்டி வரிக்கு மேல் விதித்தது. மஹாராஷ்டிரா அரசு மோட்டார் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதித்தது. மேலும் பல நிலைகளிலான வரிவிதிப்புகளுக்கு மாற்றாக ஒரே விகிதத்துக்கு கொண்டுவருவது மற்றும் அமல்படுத்திய பின்னர் மேம்படுத்துவதற்கும் பல செலவுகள் செய்யப்பட்டன. சரியான வரி விகிதம் விதிப்பது, நிறுவனங்களில் விற்பனை மற்றும் கொள்முதல் ரசீதுகளை சரிபார்ப்பது, செலுத்திய வரியை திரும்ப பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அரசு அதிகம் செலவிட்டுள்ளது என்று கூறியுள்ளது.

எனினும் ஜிஎஸ்டியை திரும்ப திரும்ப பல மாதங்களுக்கு சரி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் பொருளாதார நடவடிக்கை பாதிக்கும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x