Published : 03 Mar 2018 09:29 AM
Last Updated : 03 Mar 2018 09:29 AM

வங்கதேச ஜவுளி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

வங்கதேச ஜவுளி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது: அதிகரிக்கும் வங்கதேச இறக்குமதியால் உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செயற்கை பஞ்சு மற்றும் பருத்தி முதலான அனைத்து மூலப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான வரி விகிதங்களை விதிக்கும்படி செய்யக்கூடிய மூலப் பொருள் கொள்கையை உருவாக்க வேண்டும்.

இந்திய ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமும், புதிய சந்தைகளை நோக்கி கவனம் செலுத்துவதன் மூலமும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கலாம். இது தொடர்பான ஆய்வறிக்கையை தயாரித்து, சமர்ப்பிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

சாஃப்டா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, அனைத்து வகை ஜவுளி ரகங்களையும் வங்கதேசம் வரியின்றி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்ற சலுகையை 2000-ம் ஆண்டில் இந்திய அரசு அளித்துள்ளது. 2010-ல் இருந்து எந்த அளவுகோலும், கட்டுப்பாடும் இல்லாமல் இறக்குமதி செய்யும் சலுகையையும் இந்திய அரசு வங்கதேசத்துக்கு அளித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது.

இதனால் வங்கதேசம் மட்டுமின்றி, சீனாவும் பயனடைந்து வருகிறது. ஏனெனில், வங்கதேசம் நூல் மற்றும் துணி வகைகளை பெருமளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இவ்வாறு பின்வாசல் வழியாக சீனா, இந்திய சந்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் வங்கதேச இறக்குமதியை அதிகப்படுத்தியுள்ளன.

இதனால் இந்தியாவில் இருக்கும் பல வகையான ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு வர வேண்டிய ஆர்டர்களும், வாய்ப்புகளும் வங்கதேசத்துக்கு செல்வதால், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், சாஃப்டா வர்த்தக ஒப்பந்தம் வழங்கியுள்ள இந்த சலுகையை இந்தியா திரும்பப்பெற முடியாத நிலை உள்ளது.

இதை சரிகட்டும் வகையில், மூலப்பொருட்களான நூல் மற்றும் துணி வகைகளை இந்தியாவில் இருந்துதான் வாங்க வேண்டுமென, வங்கதேசத்தை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் மூலமே, உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க முடியும்.

அதேபோல, இந்திய நூல் மற்றும் துணி வகைகளுக்கு வங்கதேசத்தில் விதிக்கப்படும் வரி விகிதங்களைக் குறைக்கும்படி வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும், கவனம் செலுத்த வேண்டிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் உரிய நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து, 60 நாட்களில் ஆய்வறிக்கை தயாரித்து, ஜவுளி அமைச்சகத்திடம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

அண்மையில் மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து, ஜவுளித் தொழில்முனைவோரின் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x