Published : 13 Feb 2018 09:58 AM
Last Updated : 13 Feb 2018 09:58 AM

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திடும் மத்திய பட்ஜெட்: ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கருத்து

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில்கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:

யாருக்காவது ஏதாவது கிடைக்குமா என்பது மட்டும் பட்ஜெட் அல்ல. பொருளாதார சூழலில் நாட்டுக்கு என்ன தேவை, எந்த பிரிவினருக்கு எதுபோன்ற தேவை உள்ளது என்பதை முடிவு செய்வதைத்தான் பட்ஜெட் தயாரிக்கும் போது ஒவ்வொரு அரசும் கருத்தில் கொள்ளும். மக்கள் மத்தியில் பட்ஜெட் குறித்து எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும். நடுத்தர வகுப்பினர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. ஆனால், சிறு, குறு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. வியாபாரம் வளரும்போதுதான் பொருளாதாரம் வளரும்.

மேலும், லட்சக்கணக்கான குடும்பங்கள் மருத்துவ செலவுக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கி செலவழித்து நொடிந்துபோவதை நாம் பார்க்கிறோம். இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் மாறுதலை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டது. அதேபோலத்தான், விபத்து, ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் கோடிக்கணக்கானோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெரிய திட்டங்களை நிறைவேற்றும் அளவுக்கு அரசிடம் தொழில்நுட்பம், திறமை உள்ளது என்பது பல நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, 10 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அளிப்பதும் சாத்தியமானதுதான்.

மேலும், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதன் உற்பத்திச் செலவிலிருந்து 1.5 மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி அமல்படுத்த முடியும் என்று கேட்கின்றனர். 22,000 கிராம சந்தைகளை இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொடுக்கப்படும் ஆஃப்டிகல் பைபர் இணைப்பு மூலம் இந்த விலைக்குதான் விற்க வேண்டும் என்று சிறு விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும். அதன்படி குறைந்தபட்ச ஆதார விலைக்குதான் அவர்கள் விற்பார்கள். அந்த விலை அவர்களுக்கு தெரியாததுதான் தற்போது பிரச்சினையாக உள்ளது.

எனவே, மேலோட்டமாக பட்ஜெட்டை பார்க்காமல் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்று அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x