Published : 05 Feb 2018 08:40 AM
Last Updated : 05 Feb 2018 08:40 AM

நீண்டகால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு ரூ.40,000 கோடி கிடைக்கும்: நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தகவல்

பங்குகள் மூலம் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாய வரியால் 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: 14 ஆண்டுகளுக்கு பிறகு நீண்டகால மூலதன ஆதாய வரி மீண்டும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உழைத்து சம்பாத்திக்கும் நடுத்தர வர்க்கத்தினர் 30 சதவீதம் வரி செலுத்துகின்றனர். இந்த நிலையில் பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டுபவர்களை வரி வரம்புக்குள் கொண்டுவருவது தேவையானது.

2017-18-ம் கணக்கீட்டு ஆண்டில் மட்டும் ரூ.3.67 லட்சம் கோடிக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி சலுகை மூலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இருந்தாலும் ஜனவரி மாதம் 31-ம் தேதிக்கு முன்பாக கிடைக்கப்பட்ட லாபத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. ஜனவரி 31-ம் தேதியை அடிப்படையாக வைத்துதான் நீண்டகால மூலதன ஆதாய வரி நிர்ணயம் செய்யப்படும்.

2019-20-ம் ஆண்டில்

ரூ.40,000 கோடி

அடுத்த நிதி ஆண்டில் (2018-19) இந்த புதிய வரி விதிப்பு மூலம் ரூ.20,000 கோடி அரசுக்கு வருமானமாக கிடைக்கும். 2019-20-ம் நிதி ஆண்டில் வருமானம் இரு மடங்காக உயர்ந்து ரூ.40,000 கோடியாக இருக்கும்.

கடந்த ஆண்டில் மட்டும் ரூ.3.67 லட்சம் கோடிக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிக மிக அதிகமான தொகையாகும். ஒருவேளை நீங்கள் சம்பளம் பெறுபவராக இருந்தால் இந்த தொகைக்கு அதிகபட்ச வரியாக 30 சதவீதம் செலுத்தி இருக்க வேண்டும். அதனால் நீண்டகால மூலதன வரி மீண்டும் கொண்டு வரப்பட்டது என ஹஷ்முக் ஆதியா கூறினார்.

பங்குச்சந்தை மூலம் கிடைக்கும் வருமானம் நன்றாக இருப்பதால், நீண்டகால மூலதன ஆதாய வரி மீண்டும் கொண்டு வரப்படுவதாக பட்ஜெட் உரையில் ஜேட்லி குறிப்பிட்டார்.

தற்போது குறுகியகால (பங்குகளை வாங்கி ஓர் ஆண்டுக்குள் விற்று, அதில் கிடைக்கும் லாபத்துக்கு) முதலீட்டின் மீது கிடைக்கும் லாபத்துக்கு 15 சதவீதம் செலுத்த வேண்டும். ஓர் ஆண்டுக்கு மேல் பங்குகளை விற்கும் பட்சத்தில் வரி இல்லாமல் இருந்தது. பட்ஜெட்டில் இதற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x