Last Updated : 01 Feb, 2018 05:20 PM

 

Published : 01 Feb 2018 05:20 PM
Last Updated : 01 Feb 2018 05:20 PM

பட்ஜெட்: புதிய ரயில் திட்டங்கள் இல்லை; தமிழகத்துக்கு ஏமாற்றம்

 

2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் புதிய ரயில் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை, அதேசமயம் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.

2017-18 பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அவர் ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு குறித்து அறிவித்தார். அவர் கூறியதாவது:

''2017-18 நிதி ஆண்டிள் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதைக் காட்டிலும் அதிகமாக வரும் 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக முக்கியம் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் புதிய புறநகர் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

நாட்டில் உள்ள மிகப்பெரிய 600 ரயில் நிலையங்கள் இந்திய ரயில்வே நிலைய மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மறுஉருவாக்கம் செய்யப்படும். 25 ஆயிரம் ரயில் நிலையங்களுக்கு மேல் பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும். படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை, கண்காணிப்பு கேமிரா வசதி செய்து தரப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் 3,600 கி.மீ. ரயில் பாதையை புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

பனிக்காலத்தில் ரயில்கள் தாமதமாவதைத் தடுக்கவும், தடங்கல் ஏற்படுவதை தடுக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும், ரயில்பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை முறை செயல்படுத்தப்படும்.

அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 4,267 ஆள் இல்லாத ரயில் இருப்புப்பாதைகள் நீக்கப்படும்.

இந்த ஆண்டில் 12 ஆயிரம் வாகன்கள், 5 ஆயிரத்து 160 ரயில் பெட்டிகள், 700 ரயில் இன்ஜின்கள் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மும்பையில் 90கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதையை இரட்டை வழியாக மாற்றப்பட உள்ளது .இதற்காக ரூ.11 ஆயிரம்கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ஏமாற்றம்

ஆனால், தமிழகத்தின் எதிர்பார்ப்புகளாக இருந்த, எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு, 2-வது மெட்ரோ ரயில், சென்னை-தூத்துக்குடி சரக்கு ரயில், சென்னை மதுரை, கன்னியாகுமரி இடையே ரயில்போக்குவரத்து உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லை.

மேலும், கன்னியாகுமரியில் ஒருங்கிணைக்கப்பட்ட துறைமுகம், கோயம்பேடு - பூந்தமல்லி- வாலாஜாபேட்டை இடையே ரூ.1500 கோடி மதிப்பிலான 6 வழிப்பாதைக்கு நிதி ஒதுக்கீடு., கோதாவரி- பாலாறு- பென்னாறு- காவிரி நதி நீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு. கோதாவரி உபரி நீரை தமிழகத்துக்கு திருப்பிவிடுதல் உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லை.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x